புதுடெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்களின் கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. இதில், ஆயுதப்படைகளின் வீரத்தையும், பிரதமர் மோடியின் தலைமையையும் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்தை சிவசேனா தலைவரும் மகாராஷ்டிரா துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே முன்மொழிந்தார். அந்தத் தீர்மானத்தில் ஆபரேஷன் சிந்தூர் இந்தியர்களின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது என்று கூறப்பட்டிருந்தது. பிரதமர் மோடியின் தலைமையை பாரட்டியிருந்த தீர்மானம், அவர் (மோடி) எப்போதும் ஆயுதப்படைகளை ஆதரித்து வந்துள்ளதாகவும், ஆபரேஷன் சிந்தூர் பயங்கரவாதிகளுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்தக் கூட்டத்தில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா, சுமார் 19 முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள் கலந்து கொண்டனர்.
சாதிவாரி கணக்கெடுப்பு, மோடி அரசின் மூன்றாவது பதவிகாலத்தின் முதலாமாண்டு கொண்டாட்டம், நல்லாட்சி விவகாரங்கள் ஆகியவை கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் உள்ளன என்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த பாஜகவினர் தெரிவித்தனர்.
இந்தக் கூட்டத்தில் நடைபெறும் விவாதங்களின் குறிப்பிட்ட பகுதிகள், என்டிஏ ஆளும் மாநில அரசுகளின் சிறந்த நடைமுறைகளுக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது.
பல மாநில முதல்வர்கள் தங்கள் அரசுகளின் குறிப்பிடத்தக்க சாதனைகள், திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர். இந்தக் கூட்டத்தில் ஏப்.22ம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.