தமிழ் தேசியத்தை சீமான் மடைமாற்றம் செய்துவிட்டதாக விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கீழடி அகழாய்வில் கிடைத்திருக்கும் தகவல்களை இருட்டடிப்பு செய்யும் நோக்கில் மத்திய பாஜக அரசு திட்டமிட்டு செயல்படுகிறது. ஆய்வாளர் அமர்நாத் தயாரித்த அறிக்கையை வெளியிட காலதாமதம் செய்கின்றனர். அதில் என்ன திருத்தம் செய்ய வேண்டும் என தெரியவில்லை. வரலாற்று உண்மைகளை நெடுங்காலத்துக்கு மறைக்க முடியாது. திமுக கூட்டணி யில் இருந்து விசிக வெளியேற வேண்டும் என நையாண்டியாகவே தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
அதை அவர் அழைப்பாகவோ, கோரிக்கையாக முன்வைக்கவில்லை. திமுக கூட்டணியில் தொடர்வோமா என்ற கேள்வியை கேட்டு சலித்து போய் விட்டது. தமிழ் தேசியம் பேசுவதை விட திமுகவை விமர்சிப்பதையோ முக்கிய நோக்கமாக நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமான் கொண்டிருக்கிறார். தமிழ் தேசியம் என்பது இந்திய தேசியத்துக்கு எதிரான அரசியல் என்பதையே முற்றாக மடைமாற்றம் செய்துவிட்டார். அவர் அரசியல் காரணமாக திமுக அரசை விமர்சிக்கிறார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்காமல் இருந்தது எதிர்ப்பை பதிவு செய்வதற்கு தான். அப்படியே தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என கட்டாயமில்லை. இந்த முறை நிதியை ஏன் கொடுக்கவில்லை என நேரில் சண்டையிடுவது என்ற அடிப்படையில் முதல்வர் சென்றிருக்கலாம். சட்டப்பேரவையில் வெளிநடப்பு செய்வது போன்றது தான் இது. அடையாளப் பூர்வமான எதிர்ப்பு. 5 ஆண்டும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல் இருந்தால் நஷ்டம் நமக்கு தான். அவர்களுக்கு இல்லை.
மத்திய அரசோடு மாநில அரசு முற்றாக விலகி நிற்கவோ, பகைத்துக் கொள்ளவோ முடியாது. மத்திய அரசை மாநில அரசு சார்ந்திருக்கிறது. இதுவே கசப்பான உண்மை. கல்விக்கு நிதி ஒதுக்காமல் இருப்பது மக்களுக்கு விரோதமான அணுகுமுறை. மிருக பலத்தோடு பாஜக இருந்திருந்தால் இன்னும் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதற்கு இது ஒரு சான்று. இவ்வாறு அவர் தெரிவித்தார்.