“இந்திய அரசின் கொள்கையை வகுப்பது டெல்லியிலா? வாஷிங்டனிலா?” – ப.சிதம்பரம் கேள்வி

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூார்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் பல இடங்களில் தாக்குதலில் நடத்தியது. இதில் இந்திய ராணுவம் பெற்ற வெற்றியை போற்றும் விதமாகவும், ராணுவ வீரர்களின் மகத்தான சேதவைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் காங்கிரஸ் சார்பில், ‘தேசம் காக்கும் ராணுவத்துக்கு சல்யூட்’ என்ற தலைப்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது.

மேஜர் சரவணன் நினைவு சதுக்கத்திலிருந்து காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் பேரணி புறப்பட்டு, திருவள்ளுவர் பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. இதில், கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து, அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எல்.ரெக்ஸ் வரவேற்றார்.

கூட்டத்துக்கு தலைமை வகித்து, செல்வப்பெருந்தகை பேசியது: பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் தொடங்கிய 4 நாட்களில், அமெரிக்க அதிபர் டிரம்ப் 2 நாடுகளும் போரை நிறுத்துவார்கள் என்கிறார். இந்தியாவை ரிமோர்ட் கன்ட்ரோலில் இயக்குவது யார்? ராணுவ வீரர்களுக்கு முழு சுதந்திரமும், தைரியமும் கொடுத்தவர்கள் காங்கிரஸ் பிரதமர்கள் தான் என்றார்.

படம்:ர.செல்வமுத்துகுமார்

கூட்டத்தில், காங்கிரஸ் மூத்தத் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் பேசியது: பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு 4 நாட்கள் போர் நடைபெற்ற நிலையில், மே 10ம் தேதி இரு நாட்டு தளபதிகளுக்கும் உடன்பாடு ஏற்பட்டு, 3.35 மணிக்கு போர் நின்றது என அமெரிக்க அதிபர் டிரம்ப் 5.25 மணிக்கு அறிவித்தார். அதன் பிறகு தான் வெளியுறவுச் செயலாளர் 6 மணிக்கு வருத்தத்துடன் அறிவித்தார். இது இந்திய ராணுவ வீரர்களுக்கு எந்தளவுக்கு கவலை, அதிர்ச்சி அளித்திருக்கும். பாகிஸ்தான் படைத்தளபதி இந்திய படைத்தளபதியுடன் பேசியது டிரம்ப்புக்கு எப்படித் தெரிந்தது?

போரை நிறுத்தியதற்கு இந்திய அரசை பாராட்டுகிறேன். ஆனால், எந்த முறையில் போர் நிறுத்தப்பட்டது என்பதை சொல்லுங்கள். இந்திய ராணுவத்தை நினைத்து பெருமைப்பட்டாலும், அரசின் நிலைப்பாடு, மவுனம் நமக்கு கவலை அளிக்கிறது. இந்திய அரசின் கொள்கைகளை வகுப்பது டெல்லியிலா ? வாஷிங்டன்னிலா ? என்ற கேள்வி எழுகிறது. இந்திய பிரதமர், ராணுவ அமைச்சர், வெளியுறவு அமைச்சர் பேசுவதற்கு மாறாக, அமெரிக்க அதிபர், துணை அதிபர், வெளியுறவுத்துறை அமைச்சர் பேசுவது கவலை அளிக்கிறது. நாடாளுமன்றத்திலோ, தேசிய தொலைக்காட்சியிலோ போர் நிறுத்தத்தை பிரதமர் மோடி அறிவித்திருக்க வேண்டும். இந்திரா காந்தி் சொல்லியதுபோல போரை நான் நிறுத்தினேன் என்று சொன்னால், மோடிக்கும் ஒரு சல்யூட் அடித்திருப்பேன்’ என்றார்.

இதில், அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சூரஜ் எம்.என்.ஹெக்டே, தமிழக முன்னாள் தலைவர்கள் சு.திருநாவுக்கரசர், கே.எஸ்.அழகிரி, அகில இந்திய செயலாளர் கிறிஸ்டோபர் திலக், எம்.பிக்கள் எம்.ஜோதிமணி, ராபர்ட் ப்ரூஸ், மாநில பொருளாளர் எம்எல்ஏ ரூபி ஆர்.மனோகர், மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ராணுவ அணியின் மாநிலத் தலைவர் ஜி.ராஜசேகரன் நன்றி கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.