நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு தோனி விளையாடுவாரா? என்ற கேள்வியே அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவரது ஓய்வு குறித்து பேசப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆண்டு சென்னை அணி மோசமாக செயல்பட்ட நிலையில், சென்னை ரசிகர்களே சிலர் தோனி ஓய்வு பெற்றால் நன்றாக இருக்கும் என கூறுகின்றனர்.
இதுவரை 5 முறை கோப்பையை வென்ற சென்னை அணிக்கு இந்த ஆண்டு மிகவும் கடினமாக இருந்தது. 14 போட்டிகளில் விளையாடிய வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று இந்த சீசனை முடித்துள்ளது. இந்த நிலையில், தோனிக்கு இன்னும் விளையாடும் ஆர்வம் இருப்பதாக முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கூறி உள்ளார்.
இது தொடர்பாக பேசிய ராபின் உத்தப்பா, அவர் ஒய்வு பெறுவது என்பது முழுக்க முழுக்க அவரது முடிவு. அவரது உடல் நலம் மற்றும் உணரும் விதத்தை பொறுத்தது. அவருக்கு உண்மையாகவே விளையாடும் விருப்பம் உள்ளது என்பதை நீங்களே புரிந்து கொள்ள வேண்டும். அவருக்கு இன்னும் ஆர்வம் இருக்கிறது.
போட்டிக்கு பின்னர் விருது வழங்கும் விழாவில் அவர் கூறியவற்றில் இருந்து, கோப்பைகளை இன்னும் வெல்லவும், அவர் பேட்டிங் செய்யவும் ஆர்வம் இருப்பது தெளிவாகிறது. தற்போது அவர் அடுத்த ஐபிஎல்லுக்கு தனது உடலை தயார் செய்ய வேண்டும். அது நடக்கவில்லை என்றால், மினி ஏலத்திற்கு முன்னதாக அவர் முடிவு எடுப்பார். இல்லையெனில் ஒரு ட்வீட் அல்லது இன்ஸ்டாகிராம் பதிவை பார்ப்பீர்கள் என அவர் கூறி உள்ளார்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் தோனி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்தார். பின்னர் காயம் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் தொடரை விட்டு வெளியேறிய நிலையில், தோனி அணியை வழிநடத்தினார். மேலும், தோனி இந்த சீசனில் 196 ரன்களை 135 ஸ்ட்ரைக் ரேட்டுடன் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிங்க: IPL 2025: கம்மி சம்பளம், அதிக அதிரடி; மிரட்டிய இந்த 3 வீரர்கள் – யாருமே எதிர்பார்க்கல!
மேலும் படிங்க: 2025 ஐபிஎல்லுக்கு பிறகு ஆர்சிபி கழட்டிவிடப்போகும் இந்த 4 வீரர்கள்!