பெங்களூரு: பெண் ஐஏஎஸ் அதிகாரியை ‘பாகிஸ்தானி’ என்று கூறிய கர்நாடக பாஜக எம்எல்சி ரவிக்குமாரின் கருத்து அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.
பாஜகவை சேர்ந்த சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவர் சலவாடி நாராயணசாமி, கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கேவை நாயோடு ஒப்பிட்டுப் பேசியதாகக் கூறப்பட்டதை அடுத்து, மே 21 அன்று நாராயணசாமி கலபுரகி சித்தாப்பூரில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தபோது காங்கிரஸ் தொண்டர்கள் அவரை முற்றுகையிட்டு உள்ளே அடைத்தனர்.
இதனையடுத்து கலபுரகியில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய பாஜக எம்எல்சி ரவிக்குமார், கலபுரகி துணை ஆணையர் ஃபௌசியா தரணம் எந்த நாட்டை சேர்ந்தவர் எனக் கேள்வி எழுப்பினார். மேலும் அவர், “கலபுரகி துணை ஆணையர் பாகிஸ்தானில் இருந்து வந்தாரா அல்லது இங்குள்ள ஐஏஎஸ் அதிகாரியா என்று எனக்குத் தெரியவில்லை. உங்கள் கைதட்டலைப் பார்க்கும்போது, மாவட்ட ஆட்சியர் உண்மையில் பாகிஸ்தானில் இருந்து வந்திருப்பது போல் தெரிகிறது” என்று கூறினார். அவரின் இந்தப் பேச்சு கர்நாடகாவில் பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
ரவிக்குமாரின் கருத்தை “மிகவும் அருவருப்பானது” என்று கூறிய கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே, “நாடு முழுவதும் உள்ள பாஜக தலைவர்களையும் அவர்கள் பேசும் பேச்சுகளையும் பாருங்கள், அது மிகவும் கவலையளிக்கும் மனநிலையை பிரதிபலிக்கிறது. ஒரு மரியாதைக்குரிய அதிகாரி மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகளைச் சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. தங்கள் சொந்த சக குடிமக்களைப் பற்றி இப்படிப் பேசுபவர்களை, உண்மையான இந்தியர்கள் என்று அழைக்க முடியுமா? அவரே சமூக விரோதி” என்று அவர் கூறினார்.
இதுகுறித்து பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சலவாடி நாராயணசாமி, ரவிக்குமார் இப்படி பேசிய சம்பவம் குறித்து தனக்குத் தெரியாது என்று கூறினார்.