ராஞ்சி,
ஜார்க்கண்ட்டில் மாவோயிஸ்ட் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த மே 21 ஆம் தேதி நடைபெற்ற சண்டையில் ஒரே நாளில் 27 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முதுகெலும்பாக கருதப்பட்ட நம்பலா கேசவ் ராவ் (எ) பசவராஜும் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு முதல் இன்று (திங்கள்) காலை வரை லதேஹர் மாவட்டத்தில் மாவோயிஸ்ட்டுகள் இயங்கும் முக்கிய இடமான டௌனா-கரம்காட் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்ட் இயக்கத்தினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் தேடப்பட்ட மாவோயிஸ்ட் உயர்மட்ட தளபதி மணிஷ் யாதவ் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மேலும் மற்றொரு முக்கிய மாவோயிஸ்ட் இயக்கத் தலைவர் குந்தன் கர்வார் என்பவரை போலீசார் பிடித்தனர். அவரிடம் இருந்து எக்ஸ் 95 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மணீஷ் மீது 40 வழக்குகளும், குந்தன் மீது 27 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மணீஷ் யாதவ் தலைக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டார். 10 லட்சம் ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட் குந்தன் கெர்வார் கைது செய்யப்பட்டார்.