புதுடெல்லி: நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் டெல்லி இல்லத்தில் கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்ற நிர்வாகம் நிராகரித்துள்ளது.
தற்போது அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் யஷ்வந்த் வர்மா, இதற்கு முன் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தார். கடந்த மார்ச் 14-ம் தேதி இரவு அவரது டெல்லி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து, தீ அணைப்பு வீரர்களும் போலீசாரும் அங்கு விரைந்தனர். அப்போது, தீயில் இருந்த நிலையில் ஏராளமான ரூபாய் நோட்டுக்கள் கட்டுக்கட்டாக இருப்பதை அறிந்து அது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த ரூபாய் நோட்டுக்களுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று நீதிபதி யஷ்வந்த் வர்மா மறுத்த நிலையில், அது குறித்து உண்மையை அறிய அப்போதைய இந்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, குழு ஒன்றை அமைத்தார்.
மூன்று பேர் கொண்ட அந்த குழுவில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.எஸ். சந்தவாலியா மற்றும் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் இருந்தனர். இக்குழு தனது அறிக்கையை மே 3 அன்று இறுதி செய்தது.
இதையடுத்து, இந்த மாத தொடக்கத்தில் அப்போதைய தலைமை நீதிபதி கன்னா, நீதிபதி வர்மாவிடமிருந்து பெறப்பட்ட பதிலுடன் குழுவின் அறிக்கையையும் சேர்த்து குடியரசு தலைவர் மற்றும் பிரதமருக்கு கடிதம் எழுதினார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்றம் அமைத்த மூவர் குழுவின் அறிக்கை, குடியரசு தலைவர் மற்றும் பிரதமருக்கு தலைமை நீதிபதி அனுப்பிய கடிதம் ஆகியவற்றை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை மனு ஒன்று வழங்கப்பட்டது. இந்த மனுவை உச்ச நீதிமன்ற நிர்வாகம் நிராகரித்துள்ளது. இந்தத் தகவல் ரகசியத்தன்மை கொண்டது என்றும், இதனை வெளியிடுவது நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறக்கூடும் என்றும் கூறி ஆர்டிஐ விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது.