பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் ஹமாஸ் தலைமைக்கு எதிராக தீவிரவாதிகள் போர்க்கொடி

ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதன்காரணமாக அந்த அமைப்பின் தலைமைக்கு எதிராக தீவிரவாதிகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

இஸ்ரேலின் காசா, மேற்குகரை பகுதிகளில் பாலஸ்தீனர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இதில் மேற்குகரை பகுதியை, ஃபத்தா என்ற கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த ஃபத்தா அரசு பெரும்பாலும் இஸ்ரேல் அரசுடன் இணக்கமுடன் செயல்பட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் ஃபத்தா கட்சியே காசா பகுதியையும் ஆட்சி செய்து வந்தது. கடந்த 2007-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பு காசாவில் ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போதுமுதல் காசா பகுதி ஹமாஸின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே மிக நீண்ட காலமாக மோதல் நீடித்து வந்தது. கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் பகுதிகள் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் மிகப்பெரிய தாக்குதலை நடத்தினர். இதில் 1,195 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 251 பேர் பிணைக்கைதியாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலை தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் ராணுவம் நேரடியாக போர் தொடுத்தது. ஹமாஸின் அரசியல் தலைவர்கள், ராணுவ தளபதிகள் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர். இஸ்ரேல் ராணுவ தாக்குதல்களில் காசாவின் பெரும்பாலான பகுதிகள் பேரழிவை சந்தித்து உள்ளன.

கடந்த 2023-க்கு முன்பு ஹமாஸ் தீவிரவாத அமைப்பில் 30,000 பேர் இருந்தனர். தற்போது அந்த அமைப்பில் 15,000 பேர் மட்டுமே உள்ளனர்.ஆயிரக்கணக்கான ஹமாஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். ஏராளமானோர் அந்த அமைப்பில் இருந்து விலகி விட்டனர்.

ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு அவரவர் பதவிக்கு ஏற்ப இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை மாத ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இதேபோல காசா ஆட்சி நிர்வாகத்தை கவனித்து வந்த அரசு ஊழியர்களுக்கும் இதே அளவு ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.

இஸ்ரேலின் ராணுவத்தின் போரால் காசா பகுதியின் பொருளாதாரம் முழுமையாக சீர்குலைந்து உள்ளது. ஈரான், கத்தார், துருக்கி உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு பெருமளவு நிதியுதவி கிடைத்து வந்தது. அமெரிக்கா, இஸ்ரேலின் அதிதீவிர நடவடிக்கைகளால் இந்த நாடுகளில் இருந்து ஹமாஸ் அமைப்புக்கு நிதியுதவி கிடைப்பது முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது.

இதன்காரணமாக ஹமாஸ் தீவிரவாதிகள் மற்றும் அந்த அமைப்பின் அரசு ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. நிதி நெருக்கடியால் ஹமாஸ் அமைப்பில் புதியவர்களை சேர்க்க முடியவில்லை. போதிய நிதி ஆதாரம் இல்லாததால் ஆயுதங்களை கொள்முதல் செய்யவும் முடியவில்லை. மாதக்கணக்கில் ஊதியம் கிடைக்காத நிலையில் ஹமாஸ் தீவிரவாதிகள் தங்கள் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

இதுகுறித்து மத்திய கிழக்கு பாதுகாப்பு வட்டாரங்கள் கூறியதாவது: அரபு நாடுகள், கிழக்கு ஆசியா, மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு பெருமளவு நிதியுதவி கிடைத்து வந்தது. குறிப்பாக ஈரான், கத்தார், துருக்கி நாடுகளில் இருந்து ஹமாஸுக்கு மாதந்தோறும் பெரும் தொகை கிடைத்து வந்தது.

இஸ்ரேல் போர் தொடங்கியபிறகு ஹமாஸுக்கு கிடைத்து வந்த சர்வதேச நிதியுதவிகள் படிப்படியாக தடுத்து நிறுத்தப்பட்டன. தற்போது அந்த அமைப்பு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. ஏறத்தாழ திவாலான நிலையில் இருக்கிறது.

கடந்த பல மாதங்களாக ஹமாஸ் தீவிரவாதிகள் மற்றும் காசாவில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு சொற்பமான தொகை மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது. கடந்த 3 மாதங்களாக ஒரு பைசாகூட ஊதியமாக வழங்கப்படவில்லை. இதனால் ஹமாஸ் தீவிரவாதிகள் விரக்தி அடைந்து உள்ளனர். அவர்கள் தங்கள் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

தற்போதைய நிலையில் ஐ.நா. சபை வழங்கும் கோதுமை மற்றும் நிவாரண பொருட்களை ஹமாஸ் தீவிரவாதிகள் சட்டவிரோதமாக பறித்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் காசா பகுதியை சேர்ந்த அப்பாவி மக்களுக்கு உணவு, நிவாரண பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

இதனிடையே காசா பகுதிக்கு நிவாரண பொருட்களை கொண்டு செல்வதை இஸ்ரேல் ராணுவம் பல்வேறு வகைகளில் தடுத்து வருகிறது. சில ஐரோப்பிய நாடுகளின் அழுத்தம் காரணமாகவே அப்பகுதி மக்களுக்கு குறைந்தபட்ச நிவாரண உதவிகள் கிடைத்து வருகின்றன. இவ்வாறு மத்திய கிழக்கு பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.