பாகிஸ்தானிடம் சொல்லிவிட்டுதான் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடந்ததா? – காங். குற்றச்சாட்டுக்கு ஜெய்சங்கர் ரியாக்‌ஷன்

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதாக காங்கிரஸ் முன்வைக்கும் குற்றச்சாட்டு நேர்மையற்றது என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்த ஆலோசனைக் குழுக் கூட்டம் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.சி.வேணுகோபால், ஜெயா பச்சன், தயாநிதி மாறன், ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கை குறித்தும் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.

மேலும், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை விவகாரத்தில் நாடு வலுவான மற்றும் ஒன்றுபட்ட செய்தியை வெளிப்படுத்துவது மிகவும் முக்கியம் என்றும் அவர் கூறினார். இந்த கூட்டத்தில், ஆபரேஷன் சிந்தூர் தொடங்குவதற்கு முன் பயங்கரவாதிகளையும் அவர்களின் முகாம்களையும் மட்டுமே குறிவைத்து தாக்க இருப்பதாக பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதாக ஜெய்சங்கர் பேசிய வீடியோ தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு அவர், “இது நேர்மையற்றது. நிகழ்வுகளை தவறாக சித்தரிக்கக்கூடியது” என்று தெரிவித்ததாக கூட்டத்தின்போது நடந்த நிகழ்வுகளை நன்கு அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, ஜெய்சங்கரின் வீடியோ ஒன்றை வெளியிட்டு ராகுல் காந்தி ராகுல் காந்தி கேள்வி எழப்பி இருந்தார். அதில், “நமது தாக்குதலின் தொடக்கத்தில் பாகிஸ்தானுக்குத் தகவல் தெரிவித்தது ஒரு குற்றம். இந்திய அரசு இதைச் செய்ததாக வெளியுறவுத் துறை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது. யார் இதை அங்கீகரித்தார்கள்? இதன் விளைவாக நமது விமானப்படை எத்தனை விமானங்களை இழந்தது?” என கேள்வி எழுப்பி இருந்தார்.

இது தொடர்பாக ஜெய்சங்கர் எவ்வித பதிலும் அளிக்காத நிலையில், இந்த விவகாரத்தை ராகுல் காந்தி கடந்த 19-ம் தேதி மீண்டும் எழுப்பினார். அவர் தனது எக்ஸ் பதிவில், “ஜெய்சங்கரின் மவுனம், அவர் சொல்லவில்லை என்பது மட்டுமல்ல – அது மிகவும் மோசமானது. எனவே, நான் மீண்டும் கேட்கிறேன்: பாகிஸ்தானுக்குத் தெரிந்ததால் எத்தனை இந்திய விமானங்களை நாம் இழந்தோம்? இது ஒரு தவறு அல்ல. இது ஒரு குற்றம். மேலும் தேசம் உண்மையை அறியத் தகுதியானது” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

ராகுல் காந்தியின் கூற்றை மறுத்த வெளியுறவு அமைச்சகம், “ஆரம்பத்திலேயே பாகிஸ்தானை எச்சரித்தோம். இது ஆபரேஷன் சிந்தூர் தொடங்கிய பிறகு ஆரம்ப கட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தொடங்குவதற்கு முன்பு என தவறாக சித்தரிக்கப்படுகிறது. முற்றிலும் தவறான விளக்கத்தால் உண்மை மறைக்கப்படுகிறது” என்று தெரிவித்தது.

இதனிடையே, ஆபரேஷன் சிந்தூருக்கு முன்னதாக இந்தியா, பாகிஸ்தானுக்குத் தகவல் அளித்ததாக ஜெய்சங்கர் கூறியதாகக் கூறப்படும் கூற்றுகளை பத்திரிகை தகவல் பணியகம் (PIB) முன்னர் மறுத்துள்ளது. எக்ஸ் பதிவு ஒன்றில், அமைச்சர் அத்தகைய எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை என்றும் அவர் தவறாக மேற்கோள் காட்டப்படுகிறார் என்றும் PIB இன் உண்மை சரிபார்ப்புப் பிரிவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.