ஹனோய்,
பிரான்ஸ் நாட்டின் அதிபராக இமானுவேல் மேக்ரான் உள்ளார். இவர் தற்போது தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இமானுவேல் மேக்ரானுடன் அவரது மனைவி பிரிஜிட் மேக்ரான் உடன் சென்றுள்ளார்.
தற்போது இமானுவேல் மேக்ரான் வியட்நாமில் உள்ளார். நேற்றைய தினம் வியட்நாமுக்கு அவர் வந்திறங்கினார். இந்நிலையில் இமானுவேல் மேக்ரான் வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது இமானுவேல் மேக்ரான் தனது மனைவி பிரிஜிட் மேக்ரானுடன் சிறப்பு விமானத்தில் வியட்நாமுக்கு சென்றார். வியட்நாம் தலைநகர் ஹனோயில் விமானம் தரையிறங்கியது. அப்போது இமானுவேல் மேக்ரானின் விமானத்தின் கதவு திறந்தது. உள்ளே இருந்து மனைவி பிரிஜிட் மேக்ரானுடன், இமானுவேல் மேக்ரான் வெளியே வர தயாராகி இருந்தார். அப்போது திடீரென இமானுவேல் மேக்ரானின் கன்னத்தில் அவரது மனைவி பிரிஜிட் மேக்ரான் அறைவது போல உள்ளது. மனைவி பிரிஜிட் மேக்ரானின் முகம் வீடியோவில் தெரியவில்லை. விமானத்தில் கதவுகள் அதனை மறைத்துள்ள நிலையில் அவரது கை ஆக்ரோஷமாக இமானுவேல் மேக்ரானின் கன்னத்தில் அறைவது போல் அந்த வீடியோ உள்ளது.
மேலும் இமானுவேல் மேக்ரான் அதனை வெளிக்காட்டாமல் விமானத்தின் கதவின் வழியாக வெளியே உள்ளவர்களை நோக்கி கையை அசைக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு இமானுவேல் மேக்ரான் மீது அவர் மனைவியின் முகம் இறுக்கமாக இருப்பதை அந்த வீடியோவை பார்தால் தெரிகிறது. அதாவது பொதுவாக தலைவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது மனைவியுடன் கைகோர்த்தபடி விமானத்தில் இருந்து இறங்குவார்கள். நேற்றைய தினம் இமானுவேல் மேக்ரான் தனது மனைவி பிரிஜிட் மேக்ரானிடம் கைகோர்க்க கையை நீட்டுவார்.ஆனால் மனைவி பிரிஜிட் மேக்ரான் அதனை கண்டுக்கொள்ளாமல் விமான படிக்கட்டில் இறங்கி வருவதாக உள்ளது. இதனை பார்க்கும்போது இருவருக்கும் இடையே பிரச்சினை உள்ளது வெட்ட வெளிச்சமாகிறது என்று சமூகதளவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.