“மன்மோகன் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் தனிநபர் வருமான வளர்ச்சி அதிகம்” – ப.சிதம்பரம்

புதுடெல்லி: நாட்டின் தனிநபர் வருமான உயர்வை பொறுத்தவரை, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 10 ஆண்டு கால உயர்வைவிட, காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டு கால உயர்வு அதிகம் என்று முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்தியாவின் தனிநபர் வருமானம் 2013-14-ஆம் ஆண்டில் 1438 அமெரிக்க டாலர்களிலிருந்து 2024-இல் 11 ஆண்டுகளில் 2880 அமெரிக்க டாலர்களாக இரட்டிப்பாகியுள்ளது என்று நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி ஊடகங்களுக்குத் தெரிவித்தார். பொதுவாகப் பார்க்கும்போது அவர் சொன்னது சரிதான், நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இருப்பினும், அவர் முழு தகவல்களையும் கொடுத்திருக்க வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையின்படி, இந்தியாவில் தனிநபர் வருமானம் என்பது 2003-ல் USD 543 ஆகவும், 2013ல் USD 1438 ஆகவும் இருந்தது. 2023-ல் இந்தியாவின் தனிநபர் வருமானம் USD 2711 ஆகவும், 2024-ல் USD 2878 ஆகவும் இருந்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் கீழ், தனிநபர் வருமானம் 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகியது. உண்மையில் இது 2.64 மடங்கு.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் கீழ், தனிநபர் வருமானம் 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகவில்லை. உண்மையில் அது 1.89 மடங்கு. அதேநேரத்தில், 11 ஆண்டுகளில் தனிநபர் வருமானம் இரட்டிப்பாகியது. இரண்டு அரசாங்கங்களின் சாதனையில் நான் மகிழ்ச்சியடைகிறேன், ஆனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கால சாதனையில் சற்று கூடுதல் மகிழ்ச்சியை அடைகிறேன்” என தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமணியம், “நாம் இப்போது 4 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைந்துள்ளோம். இது எனது தரவுகள் இல்லை. சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகள். இந்தியா இப்போது ஜப்பானை விட பெரியது. அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனி மட்டுமே இப்போது நமக்கு முன்னாள் உள்ளன. திட்டமிட்டு சிந்திக்கப்படுவதில் நாம் உறுதியாக இருந்தால் இன்னும் 2 – 3 ஆண்டுகளில் நாம் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறுவது பெரிய விஷயம் இல்லை.” என்று தெரிவித்தார்.

மேலும் அவர், “சர்வதேச நாணய நிதியத்தின் உலக பொருளாதார அவுட்லுக் அறிக்கையின் ஏப்ரல் பதிப்பின்படி, 2026 நிதியாண்டிற்கான இந்தியாவின் பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 4.187 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஜப்பானின் சாத்தியமான மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட சற்று அதிகம், இது 4.186 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் பொருளாதாரம் 2025-இல் 6.2 சதவீதமும் 2026-இல் 6.3 சதவீதமும் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு நேர்மாறாக, உலகளாவிய பொருளாதார வளர்ச்சி 2025 ஆம் ஆண்டில் 2.8 சதவீதமாகவும், 2026 ஆம் ஆண்டில் 3.0 சதவீதமாகவும் இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது, இது இந்தியாவின் விதிவிலக்கான செயல்திறனை எடுத்துக்காட்டுகிறது” என்று தெரிவித்திருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.