லியூப்லியானா,
பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, இந்தியா, பாகிஸ்தான் இடையிலான மோதல் குறித்து சர்வதேச நாடுகளுக்குத் தெளிவாக விளக்குவதற்காக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் உள்ளடக்கிய 7 குழுக்கள் உருவாக்கப்பட்டன. அந்த குழுக்கள் பல்வேறு நாடுகளுக்கும் பயணித்து ஆபரேஷன் சிந்தூர் குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்து வருகின்றன.
அதில், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி தலைமையில் ஒரு எம்.பி.க்கள் குழுவினர் இன்று ஸ்லோவேனியாவிற்கு சென்றுள்ளனர்.
தலைநகர் லியூப்லியானாவுக்கு சென்ற கனிமொழி தலைமையிலான அனைத்து கட்சி எம்பிக்கள் குழு, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உள்ளிட்டவை பற்றி ஸ்லோவேனியா நாட்டு அரசு பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்தனர்.
லியூப்லியானா நகரில் ஸ்லோவேனியா நாடாளுமன்ற வெளிநாட்டுக் கொள்கை குழுத் தலைவரான பிரெட்ராக் பாகோவிச் மற்றும் இந்தியா–ஸ்லோவேனியா பாராளுமன்ற நட்புறவு குழுவின் உறுப்பினர் மிரோஸ்லாவ் கிரெகோரிச் ஆகியோரை கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையிலான எம்.பி.க்கள் குழுவினர் சந்தித்து விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டனர்.
அந்த சந்திப்பின்போது, பஹல்காம் தாக்குதல் குறித்தும், ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் இந்திய எம்.பி.க்கள் குழுவினர் விரிவாக விளக்கங்களை அளித்தனர். மேலும், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியான மற்றும் சகிப்புத்தன்மை இல்லாத நிலைப்பாடு, போன்ற விஷயங்களை நாட்டின் ஒருமித்த கருத்தாக தெரிவித்தனர்
இதற்கு முன்னதாக, கனிமொழி தலைமையிலான எம்.பிக்கள் குழு மாஸ்கோவில் ரஷ்ய வெளியுறவு துறை அதிகாரிகளை சந்தித்து, ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாகவும், பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக விளக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.