சென்னை: செசென்னை – கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விஜிபி பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக அதில் சிக்கியவர்களை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்
சுமார் 30 பேர் விஜிபி பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள டாப்கான் என்ற ராட்டினத்தில் ரைடு சென்றுள்ளனர். அப்போது ராட்டினத்தை இயக்கும் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அதில் பயணித்தவர்கள் அந்தரத்தில் அப்படியே சிக்கி இருந்தனர். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர். முதலில் ராட்டினத்தில் சிக்கியவர்களை மீட்க விஜிபி பொழுதுபோக்கு பூங்கா நிர்வாகம் முயன்றுள்ளது. கிரேன் இயந்திரம் மூலம் அந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் உயரம் போதாத காரணத்தால் அது கைவிடப்பட்டது. தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறை படை வீரர்கள், ராட்டினத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்கும் பணியை மேற்கொண்டனர். முதற்கட்டமாக ராட்டினத்தில் சிக்கியுள்ள குழந்தைகள் மற்றும் பெண்கள் மீட்கப்பட்டனர். முதலில் 13 பேர் மீட்கப்பட்ட நிலையில் தற்போது அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இயந்திர கோளாறு உள்ள ராட்டினத்தை இயக்கியது தொடர்பாக விஜிபி பொழுதுபோக்கு பூங்கா நிர்வாகத்தை நோக்கி கேள்வி எழுப்பினர். தற்போது கோடை விடுமுறை காலம். அதனால் பொழுதுபோக்கு பூங்காக்களில் மக்கள் அதிகம் செல்வது வழக்கம். இந்நிலையில், இந்த பூங்காக்களில் உள்ள ராட்டினங்களின் பராமரிப்பு முறைப்படி மேற்கொள்ள வேண்டும். அதை கண்காணிக்க வேண்டியதும் அவசியம் என்பதை இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது.