சென்னை: கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.5,500 விலை அறிவிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு 9.5 பிழிதிறன் கொண்ட கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.5,500 விலை அறிவிக்க வேண்டும்; சர்க்கரை ஆலைகள் உற்பத்திய செய்யும் எத்தனால், மின்சாரம் உள்ளிட்ட உப பொருட்கள் உற்பத்தி ஆலைக்கு வரும் வருவாயில் 50 சதவீதம் விவசாயிகளுக்கு பகிர்ந்து அளிக்க மத்திய அரசு சட்ட திருத்தம் செய்ய வேண்டும்; மாநில அரசின் பரிந்துரைவிலையை அறிவித்து, 2025-ம் ஆண்டு அக்.1-ம் தேதி முதல் ஒரு டன் கரும்புக்கு ரூ.4,000 ஆக விலையை உயர்த்தி வழங்க வேண்டும்; தமிழகத்தில் பழமையான கூட்டுறவு சக்கரை ஆலைகளை புதுப்பித்து மேம்படுத்த வேண்டும்.
குறிப்பாக, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைத்து புதுப்பித்திட மாநில அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில், சென்னை எழும்பூரில் நேற்றுதொடர் முழக்கப்போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினரும் இணைந்து பங்கேற்றனர்,
இப்போராட்டத்தில் நாகை.மாலி எம்எல்ஏ., கரும்பு விவசாயிகள்சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரன், மாநிலத் தலைவர் எஸ்.வேல்மாறன், மாநிலப் பொருளாளர் பெருமாள் உள்பட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்
சங்க மாநில பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன் கூறியதாவது: தமிழகத்தில் பல ஆண்டுகளாக கரும்பு சாகுபடி பரப்பளவு குறைந்து வருகிறது. தமிழகத்தில் 2012-ம் ஆண்டு 24 லட்சம் டன்கள் சர்க்கரை உற்பத்தியானது. தற்போது, 6.5 முதல் 7 லட்சம் டன்களாக சர்க்கரை உற்பத்தி சரிந்துள்ளது. இந்தநிலை ஏற்படுவதற்கு மத்திய பாஜக அரசின் கொள்கைகள் காரணம்.
மத்திய அரசு 9.5 பிழிதிறன் கொண்ட கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.5,500 விலை வழங்கக்கோரி நாடுமுழுவதும் போராடி வருகிறோம். ஆனால், மத்திய மோடி அரசு, உற்பத்தி செலவு அதிகரித்து இருப்பதற்கு ஏற்ப விலை வழங்க மறுத்து, சாமிநாதன் குழு பரிந்துரையை அமல்படுத்த மறுத்து, 5 கோடி கரும்பு விவசாயிகளுக்கு துரோகம் செய்துள்ளது.
இந்நிலையில், தமிழக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். கடந்த அதிமுக ஆட்சியில் வருவாய் பங்கீட்டு முறை சட்டத்தை கொண்டுவந்து, மாநில அரசின் பரிந்துரை விலையை ரத்து செய்தார்கள். வருவாய் பங்கீட்டு முறை சட்டத்தை ரத்து செய்து, மாநில அரசின் பரிந்துரை விலை சட்டத்தை கொண்டுவந்து, ஒரு டன் கரும்புக்கு ரூ.4,000 விலையை உயர்த்தி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.