துபாயில் இருந்து 326 பயணிகளுடன் சென்னை வந்த விமானத்தின் மீது லேசர் லைட் அடிக்கப்பட்டதால் பரபரப்பு

சென்னை: துபாயில் இருந்து 326 பயணிகளுடன் சென்னை வந்த விமானத்தின் மீது லேசர் லைட் அடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. துபாயில் இருந்து சென்னைக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் 326 பயணிகளுடன் நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டிருந்தது.

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக, விமானம் பறக்கும் உயரத்தை படிப்படியாக குறைத்து, தாழ்வாகப் பறந்து வந்தது. அப்போது, பரங்கிமலை பகுதியிலிருந்து பச்சை நிறத்தில் சக்தி வாய்ந்த லேசர் லைட் விமானத்தின் மீது அடிக்கப்பட்டது. சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட விமானி, விமானம் தரையிறங்கும் போது இடையூறு செய்வது போல் லேசர் லைட் விமானத்தின் மீது அடிக்கப்படுவதாக புகார் செய்தார்.

விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் உள்ள ரேடார் கருவி மூலம், அந்த ஒளி எங்கிருந்து வந்தது என்று ஆய்வு மேற்கொண்டனர். ஆனால், அடுத்த சில விநாடிகளில் அந்த ஒளி நின்றுவிட்டது. இதையடுத்து, சென்னையில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. லேசர் லைட் அடித்தது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் விமானங்கள் மீது லேசர் லைட் அடிக்கும் சம்பவங்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அடிக்கடி நடந்தன. இந்திய விமான நிலைய ஆணையம் இதுகுறித்து சமூக வலைதளத்தில் எச்சரிக்கை விடுத்ததோடு, விமானம் போக்குவரத்துக்கு இடையூறு செய்பவர் குறித்து தகவல் தெரிந்தால், அருகே உள்ள காவல் நிலையத்துக்கு தெரிவிக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர்.

சென்னை விமான நிலைய போலீஸாரும் தனிப்படை அமைத்து, பழவந்தாங்கல் மற்றும் பரங்கிமலை பகுதியிலிருந்து வடமாநில கட்டிட தொழிலாளர்கள் 3 பேரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது வட மாநில தொழிலாளர்கள் `நாங்கள் விளையாட்டாக அடித்தோம்’ என்று கூறி மன்னிப்பு கேட்டனர். அவர்களிடமிருந்து லேசர் லைட்டுகளை பறிமுதல் செய்த போலீஸார், கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.

கடந்த 2 ஆண்டுகளாக விமானத்தின் மீது லேசர் லைட் அடிக்கும் சம்பவங்கள் நடக்காமல் இருந்தது. தற்போது விமானத்தின் மீது லேசர் லைட் அடிப்பது மீண்டும் தொடங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.