நடந்து முடிந்த பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் ஆசிரியர்களுக்கு விளக்கம்கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருவதால் சர்ச்சைகள் எழுந்துள்ளன.
தமிழக பள்ளிக்கல்வியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3 முதல் 27-ம் தேதி வரை நடைபெற்றது. இதன் முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. அதில் பிளஸ் 2 வகுப்பில் 95 சதவீதம் பேரும், பிளஸ் 1 வகுப்பில் 92 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர். அதேநேரம் இவ்விரு வகுப்புகளில் பொதுத்தேர்வில் 1 லட்சத்து 218 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். அதில் 73,820 பேர் (71.5%) அரசுப் பள்ளி மாணவர்களாவர்.
இதற்கிடையே திருச்சி உட்பட சில மாவட்டங்களில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் ஆசிரியர்களிடம் அதுதொடர்பாக விளக்கம் கேட்டு 17ஏ நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அரசு மாதிரிப் பள்ளிகளில் ஏதேனும் மாணவர்கள் தோல்வி அடைந்திருந்தால் அவரின் வகுப்பு மற்றும் பாட ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கும் கெடுபிடிகள் அதிகம் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய செயல்பாடுகளை கைவிட வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பொதுச் செயலாளர் பொ.அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எமிஸ் உட்பட கற்றல் சாராத பணிகளையும், நலத்திட்டங்கள், கலைத் திருவிழாக்களையும் தனி அலுவலர்கள் நியமிக்காமல் ஆசிரியர்களை பயன்படுத்தி ஆண்டு முழுவதும் சுமைதாங்கிகள் போல பணிகள் வாங்கப்படுகின்றன. ஆனால் தற்போது தேர்ச்சி அடையாத மாணவர்களுக்காக ஆசிரியர்களை பொறுப்பாக்கி விளக்கம் கேட்பது நியாயமில்லை.இதில் ஆசிரியர்களை மட்டும் குற்றவாளியாக்குவதை ஏற்க முடியாது.
சமுதாயத்தின் பல்வேறு சூழல்களில் இருந்து மாணவர்களை நெறிப்படுத்தும் பணிகளை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செய்துவருகிறார்கள். பள்ளிகள் புள்ளிவிவரங்களாக, இயந்திரகதியாக மாறக்கூடாது. எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு மனஉளைச்சல்களை உண்டாக்கும் இத்தகைய செயல்களை பள்ளிக்கல்வித் துறை கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.