டாக்கா,
வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மாணவர்கள் போராட்டத்தால் பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்றது
இதனிடையே, வங்காளதேசத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் பொதுத்தேர்தல் நடத்த வேண்டுமென ராணுவ தளபதி வாகிர் உல் சமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதே கோரிக்கையை எதிர்க்கட்சியாக வங்காளதேச தேசியவாத கட்சி முன்வைத்துள்ளது. எதிர்க்கட்சி தலைவரான ஹலிதா சியாவுக்கு ராணுவ தளபதி வாகிர் ஆதரவு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அரசுக்கு எதிராகவும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை, விதிகளை மீறி செயல்படும் அரசு ஊழியர்களை உரிய விசாரணையின்றி 14 நாட்களில் பணியில் இருந்து நீக்கும் சட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது முகமது யூனிஸ் தலைமையிலான அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அந்நாட்டில் ஆசிரியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது முகமது யூனிஸ் தலைமையிலான அரசுக்கு நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளது. இதனால், வங்காளதேசத்தில் முகமது யூனிஸ் தலைமையிலான அரசு விரைவில் கவிழும் என எதிர்பார்க்கப்படுகிறது.