IPL 2025 : ஐபிஎல் 2025 இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. லீக் சுற்றுப் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்து இப்போது பிளேஆப் சுற்று போட்டிகள் நடக்க உள்ளன. மொத்தம் 10 அணிகள் விளையாடிய ஐபிஎல் 2025 லீக் போட்டிகளில், புள்ளிப் பட்டியலின் அடிப்படையில் டாப் 4 இடங்களை பிடித்த அணிகள் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. பஞ்சாப் கிங்ஸ் முதலிடம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இரண்டாவது இடம், குஜராத் டைட்டன்ஸ் மூன்றாவது இடம், மும்பை இந்தியன்ஸ் நான்காவது இடத்தை பிடித்துள்ளன. முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ள பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் குவாலிஃபையர் 1 போட்டியிலும், மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தை பிடித்த குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் எலிமினேட்டர் 1 போட்டியிலும் விளையாட இருக்கின்றன.
ஐபிஎல் 2025 பிளேஆப் போட்டி அட்டவணை :
மே 29 ஆம் தேதி சண்டிகரில் குவாலிஃபையர் 1 போட்டி நடக்கிறது. இதில் ஐபிஎல் 2025 புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மே 30 அன்று அதே மைதானத்தில் எலிமினேட்டரில் மோதுகின்றன.
குவாலிஃபையர் 1-ல் தோல்வியடையும் அணியும், எலிமினேட்டரில் வென்ற அணி ஜூன் 1 அன்று குவாலிஃபையர் 2ல் மோதும். அதைத் தொடர்ந்து ஜூன் 3 அன்று அகமதாபாத்தில் இறுதிப் போட்டி நடைபெறும். இந்த இரண்டு போட்டிகளும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும்.
ஐபிஎல் பிளேஆப் லைவ் ஸ்டீரிமிங்
ஐபிஎல் போட்டிகளைப் பொறுத்த வரை இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் லைவ்வாக பார்க்கலாம். டிஜிட்டலில் பார்க்க வேண்டும் என்றால் ஜியோ ஹாட்ஸ்டார் செயலியை டவுன்லோடு செய்து அதில் பார்த்து ரசிக்கலாம். பிளேஆப் போட்டிகளைப் பொறுத்தவரை இரவு 7 மணிக்கு டாஸ் போடப்பட்டு, 7.30 மணிக்கு போட்டி தொடங்கும்.
குவாலிஃபையர் 1 ஜாக்பாட்
குவாலிஃபையர் 1 விளையாடும் அணிகளுக்கு ஒரு ஜாக்பாட் இருக்கிறது. அது என்னவென்றால் இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் நேரடியாக ஐபிஎல் 2025 இறுதிப்போட்டிக்கு சென்றுவிட முடியும். அதேநேரத்தில் எலிமினேட்டரில் விளையாடும் அணிகளில் தோற்கும் அணி ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறிவிடும். இதனைத் தொடர்ந்து குவாலிஃபையர் 2வது போட்டியில் எலிமினேட்டரில் வென்ற அணியும், குவாலிஃபையரில் தோற்ற அணியும் மோதும். இதில் வெற்றி பெறும் அணி ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு செல்லும். அதனால், இனி வரும் ஒவ்வொரு ஐபிஎல் போட்டியிலும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
ஆர்சிபி, பஞ்சாப் அணிகளுக்கு வாய்ப்பு
இந்த ஐபிஎல் தொடரை பொறுத்தவரை பஞ்சாப் மற்றும் ஆர்சிபி அணிகள் இதுவரை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வெல்லாத அணிகளாகவும், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஏற்கனவே ஐபிஎல் கோப்பையை வென்ற அணிகளாகவும் உள்ளன. ஆர்சிபி, பஞ்சாப் அணியைப் பொறுத்தவரை முதன்முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்ல கிடைத்திருக்கும் மிக அருமையான வாய்ப்பு என்பதால் இரு அணிகளும் தங்களின் சகல வியூகத்தையும் களத்தில் இறக்குவார்கள். அதனால், இந்த அணிகள் விளையாடும் போட்டிகளில் நிச்சயம் அனல் பறக்கும். அதனால், பிளேஆப் போட்டிகளில் ரசிகர்களுக்கு விருந்து காத்திருக்கிறது என உறுதியாக சொல்லலாம்.
மேலும் படிங்க: தோனி To ஃபாஃப் டு பிளெசிஸ்: ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வயதான கேப்டன்களின் பட்டியல்!
மேலும் படிங்க: IPL Final: மும்பை இந்தியன்ஸ் இல்ல.. “ஆர்சிபி அணிக்கும்…” அடித்து சொல்லும் முன்னாள் சிஎஸ்கே வீரர்!