கொல்லப்பட்ட நக்சல் தலைவர் பசவராஜுவின் கூட்டாளி சரண் அடைந்தது எப்படி? – புதிய தகவல்கள்

சுக்மா: போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் கொல்லப்பட்ட பசவராஜுவின் நம்பிக்கைக்குரிய கூட்டாளி ஒருவர் போலீஸாரிடம் சரண் அடைந்துள்ளார். சிதறுண்டு வரும் நக்சலைட்டுகளின் இயக்கம் குறித்து அவர் வெளிப்படையான தகவல்களை போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவராக இருந்தவர் நம்பல கேசவ் ராவ் என்கிற பசவராஜு. இவருடன் மொத்தம் 27 மாவோயிஸ்டுகள், பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம், இந்தியாவில் நக்சல் இயக்கத்துக்கு எதிரான போரில் முக்கிய திருப்புமுனையாக கருதப்படுகிறது. கடந்த 21-ம் தேதி இந்த சம்பவம் சத்தீஸ்கரின் நாராயண்பூர் மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களுக்கு இடையேயான அபுஜ்மத் வனப்பகுதியில் நடந்தது. இந்த நடவடிக்கை ‘ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட்` என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் கொல்லப்பட்ட பசவராஜுவின் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக கருதப்பட்டவர் பாபு கவாசி. இவர் அண்மையில் போலீஸார் முன்பு சரண் அடைந்தார். பசவராஜு செல்லும் இடங்களுக்கு எல்லாமல் அவருடன் துப்பாக்கியேந்தி பாதுகாவலராகச் செல்பவர்தான் இந்த பாபு கவாசி. பல ஆண்டுகளாக பசவராஜுவின் தீவிர விசுவாசியாக இருந்தார் பாபு கவாசி. இந்நிலையில் போலீஸார், துணை ராணுவப் படைகளின் தீவிர தேடுதல் காரணமாகவும், உயிர் பயம் காரணமாகவும், பாபு கவாசி போலீஸாரிடம் சரண் அடைந்துள்ளார்.

பசவராஜு கொல்லப்பட்ட சில தினங்களிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது. அடர்ந்த காட்டுக்குள் மறைந்து வாழ்ந்த பாபு கவாசி, தனது மனைவியுடன் வெளியே வந்து தாந்தாவாடா பகுதியில் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு துணை ராணுவப் படையினர், போலீஸாரிடம் சரண் அடைந்துள்ளார்.

பசவராஜு, கணபதி போன்ற நக்சலைட் இயக்கத் தலைவர்களுக்கு மெய்க்காவலனாகவும் பணியாற்றியுள்ளார். சரண் அடைந்துள்ள நிலையில் மற்ற நக்சலைட்டுகளையும் சரண் அடைந்து விடுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: வனப்பகுதிகளில் நக்சல் தேடுதல் வேட்டை தீவிரம் அடைந்துள்ளது. எனவே, உயிர் வாழ ஆசைப்படுபவர்கள் உடனடியாக சரண் அடைந்து விடுங்கள். இப்போதும் நேரம் கடந்து விடவில்லை. நான் பசவராஜுவுடன் கடைசி வரை இருந்தேன்.

அவர் இறந்த பிறகு மரண பயம் வந்துவிட்டது. மாநில அரசு இந்தப் பிரச்சினையை இதோடு விடப்போவதில்லை. மேலும் நாங்கள் இருந்த வனப்பகுதி பாதுகாப்பானதாக இல்லை. எனவே, சரண் அடைந்துவிட்டேன். சரண் அடைந்து விடுமாறு என்னுடன் இருந்த மற்ற நக்சலைட்டுகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளேன்.

போலீஸாரும், துணை ராணுவப் படையினரும் தீவிரமாக உள்ளனர். வாரம்தோறும் என்கவுன்ட்டர் நடந்து நக்சலைட்டுகள் உயிரிழக்கின்றனர். நான் பிஎல்ஜிஏ பிரிவின் 7-வது கம்பெனியில் (உட்பிரிவு) இரந்தேன். 2012-ம் ஆண்டு முதல் நக்சலைட்டுகள் இயக்கத் தலைவர்கள், குழு உறுப்பினர்களுக்கு பாதுகாவலராக இருந்தான்.

முதலில் கணபதி என்ற தலைவருக்கும், அதன் பின்னர் 2016 முத் 2024 வரை பவசராஜுவுக்கு பாதுகாவலராக இருந்தேன். என்னிடம் இருந்த ஆயுதங்கள், ஆட்டோமேட்டிக் வகையிலானது. அதனால் தேடுதல் வேட்டைகளின்போது போலீஸார் மீது பயமின்றி தாக்குதல் நடத்துவோம்.

போலீஸார் மீது தாக்குதல், பொருட்களில் வெடிகுண்டுகளை வைத்து அதைத் தொட்டவுடன் வெடிப்பது போன்ற குண்டுகளைத் தயார் போன்றவற்றில் நான் பயிற்சி பெற்றிருந்தேன்.

கொல்லப்பட்ட நக்சலைட்டுகளின் தலைவர் பசவராஜு தெலுங்கு, கோந்தி, உடைந்த இந்தி மொழிகளைப் பேசுவார். பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளார். குறிப்பாக மாவட்ட ரிசர்வ் போலீஸார்(டிஆர்ஜி) மீது அடிக்கடி தாக்குதல் நடக்கும்.

தற்போது டிஆர்ஜி போலீஸில் இருப்பவர்கள் பெரும்பாலும் முன்னாள் நக்சல்கள்தான். திருந்தி வாழ முடிவு செய்து சரண் அடைந்த அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் துறையில் இணைந்து பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு நக்சலைட்டுகளின் தொழில்நுட்பங்கள், வனப்பகுதிகளில் செல்லும் வழி, தாக்குதல் திட்டங்ககள் தெரியும்.

எனவே, அவர்களிடத்தில் நாங்கள் உஷாராக இருப்போம். தற்போதைய நிலவரத்தின்படி நக்சலைட்டுகளின் இயக்கம் உடைந்து வருகிறது. அதில் இருக்கும் பெரும்பாலான உறுப்பினர்கள் மரண பயத்தில் உள்ளனர். மேலும் முன்பு எங்களுக்கு ஆதரவு அளித்து வந்த மக்கள் தற்போது ஆதரவைத் தர மறுக்கின்றனர். மேலும் நக்சலைட்டுகளின் கொள்கையும் மாறிவிட்டது. புரட்சிக்காக ஆரம்பித்த இயக்கம் தற்போது தப்பித்துச் செல்வதிலும், உயிர் வாழ்வதிலும் மட்டுமே உள்ளது.

பசவராஜு சரண் அடைய முன் வந்திருந்தால் அவர் இப்போது உயிருடன் இருந்திருப்பார். இதை நாங்கள் முன்னதாகவே புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யவில்லை. இதனால் ஏராளமானோரை இழந்துவிட்டேன். இதைப் புரிந்து கொண்ட நான் சரண் அடைந்து விட்டேன். மற்றவர்களையும் அதனால்தான் சரண் அடையச் சொல்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.