ஆக்ரா,
உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் வீடு அருகே 5 வயது சிறுமி விளையாடியபடி இருந்துள்ளாள். அந்த வீட்டின் அருகே கோவில் ஒன்று இருந்துள்ளது. அப்போது, வாலிபர் ஒருவர் சிறுமியை கோவிலுக்குள் வரும்படி கூறி, அழைத்து சென்றுள்ளார். இதன்பின்பு சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.
சிறுமி கத்தி கூச்சலிட்டதும், சத்தம் கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து ஓடியுள்ளனர். சிறுமியின் பாட்டி ஓடி வந்தபோது, அந்த வாலிபர் அவரை தள்ளி விட்டு, விட்டு தப்பியோடி விட்டார். ஆனால், அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து, அந்த வாலிபரை பிடித்து அடித்து, உதைத்தனர். பின்னர் அவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
எனினும், வாலிபரின் குடும்பத்தினர், அவருக்கு மனநல பாதிப்பு உள்ளது என கூறியதன் அடிப்படையில், அந்நபரை போலீசார் விடுவித்து விட்டனர். ஆனால், கோவிலில் பலாத்காரம் செய்தது பற்றிய சி.சி.டி.வி. வீடியோ ஒன்று வைரலானது.
இதுபற்றி தகவல் அறிந்ததும், உள்ளூர்வாசிகள் காவல் நிலையத்திற்கு சென்று முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த நபர் மருந்து கடை ஒன்றில் வேலை செய்து வந்த விவரமும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அந்நபரை மீண்டும் கைது செய்தனர்.
அந்த வாலிபருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவருடைய குடும்பத்தினர், அவர் மனதளவில் பாதிக்கப்பட்டவர் என பொய்யான தகவல்களை அளித்துள்ளனர். ஆனால், நல்ல மனநிலையிலேயே அவர் இருக்கிறார் என போலீசார் தெரிவித்தனர்.
சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. சம்பவத்திற்கு பின்னர் அந்த அதிர்ச்சியில் இருந்து சிறுமி மீள முடியாமல் இருக்கிறார் என தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.