குல்மார்க்: ஏப்ரல் 22-ம் தேதி நடந்த பஹல்காம் தாக்குதல், ஜம்மு காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து பேச்சுவார்த்தையை தடுத்து நிறுத்தவில்லை என்றும், சமீபத்தில் நடந்த நிதி ஆயோக் நிர்வாக கூட்டதில் இந்தப் பிரச்சினை எழுப்பப்பட்டது என்றும் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.
சுற்றுலா தளமான குல்மார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய உமர் அப்துல்லா, “நிதி ஆயோக் கூட்டத்தில் பகிரப்பட்ட உரையை நீங்கள் எடுத்துக்கொண்டால், மாநில அந்தஸ்து விவகாரம் குறித்து அதில் குறிப்பிடப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். அந்த உரை பிரதமர் மற்றும் நிதி ஆயோக்கின் அனைத்து நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பஹஸ்காம் தாக்குதல் ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்து பேச்சுவார்த்தையை பாதித்துள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் உமர், “மாநில அந்தஸ்துப் பற்றிய பேச்சு இன்னும் நின்று போய்விடவில்லை. நான் செய்ய விரும்பாத ஒரு விஷயம், சட்டப்பேரவை (ஜம்மு காஷ்மீர்) சிறப்புக் கூட்டத்தைக்கூட்டி மாநில அந்தஸ்து குறித்து பேசுவதுதான். ஆனால், அதற்காக மாநில அந்தஸ்துக்கான பேச்சுவார்த்தை நின்றுவிட்டது என்று அர்த்தமில்லை. பேச்சுவார்த்தை தொடர்கிறது” என்றார்.