“தமிழ்தான் மூத்த மொழி…” – கமல்ஹாசன் கருத்துக்கு அன்புமணி ஆதரவு

சென்னை: “அன்னைத் தமிழ்தான் அகில உலகின் மூத்த மொழி. தேவையற்ற சர்ச்சைகள் தவிர்க்கப்பட வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம் என்று நடிகர் கமலஹாசன் கூறியதை அடிப்படையாக வைத்து கர்நாடகத்தில் அவருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. நடிகர் கமலஹாசனுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமைய்யாவும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். தமிழ் மொழியின் முதுமையை உலகமே ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில், அது குறித்த தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கதாகும்.

உலகின் மூத்த மொழிகளாக அறியப்படுபவை லத்தீன், கிரீன், ஹீப்ரு, சமஸ்கிருதம், அரபி, மாண்டரின் உள்ளிட்டவை தான், இந்த மொழிகள் அனைத்தையும் விட மூத்த மொழி அன்னைத் தமிழ்தான். தமிழில் இருந்தும் தான் பிற திராவிட மொழிகள் பிறந்தன என்பது மொழி ஆராய்ச்சியாளர்களால் நிரூபிக்கப்பட்ட உண்மை. தாயை விட மகள் மூத்தவராக இருக்க முடியாது. இதன் மீது எவரும் வினா தொடுக்க முடியாது.

கன்னட மொழிக்கென்று பல சிறப்புகள் இருப்பதை மறுக்க முடியாது. 2004-ஆம் ஆண்டில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நிலையில், கன்னடமும், தெலுங்கும் 2008-ஆம் ஆண்டில் செம்மொழியாக அறிவிக்கப்பட்டன. எனவே, அனைத்து மொழிகளும் அவற்றின் பழமை, இலக்கியச் செழுமைக்காக போற்றப்பட வேண்டும். அதை விடுத்து மொழிகளை அடிப்படையாகக் கொண்ட சர்ச்சைகள் தவிர்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.