ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் நேற்று மழையின் தாக்கம் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் கனமழை தொடர்கிறது. அவலாஞ்சியில் நான்காம் நாளாக 100 மி.மீட்டருக்கும் அதிகமாக மழை பதிவாகியுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் அநேக இடங்களிலும் பருவமழை பரவியுள்ளதாகவும், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாகவும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பாதிப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டது.
இதில் கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டது. இதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வந்தது. ஆபத்தான மற்றும் தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் கடந்த 4 நாட்களாக மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக நீலகிரியில் சுற்றுலா தளங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
80 சதவீதம் சுற்றுலா பயணிகள் சொந்த ஊர் திரும்பி விட்டனர். மேலும் நீலகிரிக்கு வர அறை முன் பதிவு செய்திருந்த சுற்றுலா பயணிகள் ரத்து செய்து விட்டனர். நேற்று மழையின் தீவிரம் சற்று குறைந்திருந்த நிலையில் இன்று மீண்டும் கன மழை பெய்ய தொடங்கியுள்ளது.இதன் காரணமாக நீர் ஓடைகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
அணைகளில் நீர்மட்டம் அதிகரிப்பு: நீர் பிடிப்பு பகுதிகளான அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பைக்காரா உள்ளிட்ட அணைகள் மின் உற்பத்தி மற்றும் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு முக்கிய அணையாக உள்ளது. கடந்த மூன்று நாட்களில் மேற்கண்ட பகுதிகளில் அதிகபட்சம் மழை பதிவாகி இருப்பதால், நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து, இரண்டு நாட்களில், 10 அடி வரை நீர் மட்டம் உயர்ந்துள்ளது. பிற அணைகளிலும் நீர் மட்டம், 5 அடி வரை உயர்ந்துள்ளது.
குந்தா அணை திறப்பு: மேற்கு தொடர்ச்சி மலை நீரோடைகளில் வழக்கத்தை விட நீர்வரத்து அதிகரித்தது. குந்தா அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான, ஒசஹட்டி, பிக்குலி, தங்காடு நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்தது. அணையின் முழு கொள்ளளவான, 89 அடியை எட்டியது. வினாடிக்கு, 400 கன அடி நீர்வரத்து உள்ளது. இரண்டு மதகுகளில் தலா, 200 கன அடி வீதம் நேற்று மாலை வரை உபரிநீர் வெளியேற்றப்பட்டது. பிற அணைகளில் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
சுற்றுலா தலங்கள் மூடல்: நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி மாவட்ட வன அலுவலர் அவர்களின் உத்தரவின்படி இன்று (மே 18) ஒரு நாள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோடநாடு காட்சி முனை தவிர லேம்ஸ்ராக், டால்பின் நோஸ், கேத்தரின் நீர் வீழ்ச்சி, தொட்டபெட்டா காட்சிமுனை, பைன் பாரஸ்ட், பைன் பாரஸ்ட், ஷூட்டிங் ஸ்பாட், பைக்காரா நீர் வீழ்ச்சி, கேரன்ஹில், அவலாஞ்சி ஆகிய சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.
மழை அளவு: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டர் அளவில் வருமாறு:
- அவலாஞ்சி 142
- பாலகொலா 135
- அப்பர்பவானி 129
- குந்தா 96
- நடுவட்டம் 68
- கிளன்மார்கன் 66
- எமரால்டு 64
- கூடலுார் 53
- ஊட்டி 48.9
- சேரங்கோடு 46
- பந்தலூர் 41
- பாடந்தொரை 32
- குன்னூர் 28
- பர்லியார் 5