பழநி: பழநி முருகன் கோயிலில் பாலித்தீன் கவருக்கு மாற்றாக எளிதில் மட்கும் ‘பயோ பேக்’கில் பிரசாதம் விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது தவிர, கோயில் நிர்வாகம் சார்பில் லட்டு, அதிரசம், முறுக்கு, தினை மாவு, புளியோதரை, சர்க்கரை பொங்கல், பொங்கல் தலா ரூ.15-க்கு விற்பனை செய்யப்படுகின்றன.
இவற்றை பக்தர்கள் அதிகளவில் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். தினமும் 2 லட்சம் ரூபாய்க்கு பிரசாதம் மட்டும் விற்பனையாகிறது. இவற்றில் லட்டு, அதிரசம், முறுக்கு, தினை மாவு உள்ளிட்டவை வெள்ளை காகித கவரில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இதில், உள்ள எண்ணெயை உறிஞ்சுவதோடு, கவரின் உள்ளே காற்று போகும்படி இருந்ததால் பிரசாதம் காய்ந்து போய் சுவை மாறும் நிலை ஏற்பட்டது. இதை தவிர்க்க, கடந்த சில மாதங்களாக பாலித்தீன் கவரில் பிரசாதம் விற்பனை செய்து வந்தனர்.
மட்காத பாலித்தீன் கவருக்கு பதிலாக எளிதில் மட்கும் வகையிலான ‘பயோ பேக்’கில் பிரசாதம் வழங்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிலும் செய்தி வெளியானது.
இதையடுத்து, தற்போது பாலித்தீன் கவருக்கு மாற்றாக எளிதில் மட்கும் ‘பயோ-பேக்கில்’ பிரசாதம் விற்பனையை கோயில் நிர்வாகம் தொடங்கி உள்ளது. முருகன் படத்துடன், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் என அச்சிடப்பட்ட இந்த கவரில் பிரசாத தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஐ) வழங்கியுள்ள உரிமம் எண், பயோ பேக் தயாரிப்பு நிறுவனத்தின் முகவரி மற்றும் க்யூஆர் கோடு ஆகியவை இடம் பெற்றுள்ளன. பயோ பேக்கில் பிரசாதம் வழங்குவது பக்தர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.