சென்னை: பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி இளம்பெண்ணின் 28 வார கருவைக் கலைக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 80 சதவீத மாற்றுத்திறனாளியான 27 வயது இளம்பெண்ணை பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதன்காரணமாக அந்த பெண் கருவுற்றுள்ளார். இதுதொடர்பாக அந்தப்பெண்ணின் தாயார் அளித்த புகாரின்பேரில் அந்தப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அப்பெண்ணின் வயிற்றில் வளரும் 28 வார கருவைக் கலைக்க செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மறுத்துவிட்ட நிலையில், அந்த கருவைக் கலைக்க அனுமதி கோரி இளம்பெண்ணின் தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி, பொதுவாக கருவைக் கலைக்க அனுமதிக்கத்தக்க காலக்கெடுவான 24 வாரத்தை கடந்துவிட்ட போதிலும், பாதிக்கப்பட்ட பெண் 80 சதவீத மாற்றுத்திறனாளி என்பதை கருத்தில் கொண்டு, அவரது கருவை கலைக்கலாம்.
எனவே உடனடியாக மருத்துவக் குழுவை அமைத்து, பாதிக்கப்பட்ட பெண்ணை ஆய்வு செய்து, கருவை கலைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவேளை இனிமேல் கருவைக் கலைக்க முடியாது என்றால் அதுதொடர்பாகவும் மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனுக்கு உத்தரவிட்டுள்ளார்.