வாராணசி, அயோத்தி வரிசையில் தாமேஷ்வர்நாத் கோயில்: முதல்வர் யோகி அடிக்கல்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் தாமேஷ்வர்நாத் கோயிலும் பிரம்மாண்டமாகக் கட்டமைக்கப்பட்டு வரும் நிலையில், இதற்கான அடிக்கல்லை முதல்வர் யோகி ஆதித்யநாத் நாட்டினார்.

இந்தியாவில் அதிகமான முக்கியப் புனிதத் தலங்கள் கொண்ட மாநிலம் உபி. இம்மாநிலத்தில் உள்ள முக்கியக் கோயில்கள் பாஜக ஆட்சியில் படிப்படியாகப் பிரம்மாண்டமாகக் கட்டமைக்கப்படுகின்றன.இதற்காகப் பல ஆயிரம் கோடி ரூபாய்களை பாஜக அரசு செலவிட்டு வருகிறது. முதலாவதாக காசி எனும் வாராணசியின் காசி விஸ்வநாதர் கோயில் புனரமைக்கப்பட்டது.

பிறகு, உச்ச நீதிமன்ற வழக்கு முடிந்த நிலையில் அயோத்தியின் ராமர் கோயிலும் தயாராகிவிட்டது. இந்த வரிசையில் கிழக்கு உபி பகுதியிலுள்ள சிவத்தலமான தேவா தேவ மகாதேவ் பாபா தாமேஷ்வர்நாத் கோயில் வளாகமும் பிரம்மாண்டமாகக் கட்டமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல்லை நேற்று முன்தினம் உபி முதல்வர் யோகி நாட்டினார். உபியின் சந்த கபீர் தாஸ் மாவட்டத்தின் தலைநகரான கலீலாபாத்தில் தாமேஷ்வர்நாத் கோயில் உள்ளது.

மிகவும் பழமையாக இந்த கோயில் சிவனுக்கானது. மகாபாரதக் காலத்தில் இப்பகுதியை மகராஜா விராத் ஆட்சி செய்துள்ளார். அப்போது, மகாபாரதத்திற்கு பின் வெளியேறிய பாண்டவர்களும், குந்தி தேவியும் இக்கோயிலில் சில நாள் தங்கியிருந்ததாக நம்பிக்கை உள்ளது. அந்த சமயத்தில் குந்திதேவியால் இக்கோயிலில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் ஒரு கூற்று உள்ளது. அதே சிவலிங்கம் தான் தாமேஷ்வர்நாத் கோயிலில் இன்றும் அமைந்ததாக பொதுமக்கள் நம்புகிறார்கள்.

இதனால், வட மாநிலங்களில் இருந்து பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து செல்கிறார்கள். எனவே, வாராணசி, அயோத்யாவை போல் தாமேஷ்வர்நாத்தையும் மேம்படுத்திப் பிரம்மாண்டமானக் கோயிலாக அமைக்க உபி அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் யோகி, சந்த் கபீர் மாவட்டத்திற்கு ரூ.1,515 கோடி மதிப்பிலான 528 வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார்.

சந்த கபீர் தாஸ் மாவட்டத்தின் மத அடையாளத்தை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்புக்கான புதிய வழிகளையும் திறக்கும் என்று முதல்வர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த விழாவில் முதல்வர் யோகி பேசுகையில், ‘தாமேஷ்வர்நாத் கோயிலின் வளர்ச்சிக்காக இதர இரு இடங்களை போல் பெரிய அளவில் யாரும் இடம்பெயரத் தேவையில்லை.

இதில் இடம்மாறும் நிலைக்கு உள்ளாகும் சிலருக்காக மறுவாழ்வு ஏற்பாடு செய்யப்படும், உள்ளூர் கடைக்காரர்கள், தொழிலதிபர்கள் மற்றும் கோசைன்களின் நலன்களும் கவனிக்கப்படும். தற்போது உத்தரப் பிரதேசத்தில் உள்ள அனைத்து புனித யாத்திரைத் தலங்களும் நவீனமாகவும் பக்தர்களுக்கு வசதியாகவும் மாறி வருகின்றன. குறிப்பாக தாமேஷ்வர்நாத் கோயில் வளர்ச்சியால் சந்த் கபீர் தாஸ் மாவட்டத்தின் முகம் முழுவதுமாக மாறி விடும்.’ எனத் தெரிவித்தார்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான அங்கீகாரம் பெற்ற சாந்த் கபீர் நகர் மாவட்டத்தின் முக்கிய மதத் தலமாக பாபா தாமேஷ்வர்நாத் தாம் உள்ளது. இந்த இடம் பூர்வாஞ்சல் எனும் உபியின் கிழக்குப் பகுதியில் ஒரு முக்கிய நம்பிக்கை மையமாகக் கருதப்படுகிறது. அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமர் கோயில் மற்றும் காசி விஸ்வநாதர் தாம் போலவே, இங்கும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது, ஆனால் இதுவரை அது விரிவாக வளர்ச்சியடையவில்லை. முதல்வர் யோகியின் அறிவிப்புக்குப் பிறகு, இப்போது இந்த இடம் ஒரு புதிய சகாப்தத்தில் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.