புதுடெல்லி: இந்தியாவில் ரேடாரில் சிக்காத 5-ம் தலைமுறை போர் விமானங்கள் தாயரிக்கும் திட்டத்துக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். பாகிஸ்தானுக்கு இத்தகைய போர் விமானங்களை வழங்கும் திட்டத்தை சீனா விரைவுபடுத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் ராஜ்நாத் சிங் இதற்கான ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள அதிக சக்திவாய்ந்த போர் விமானமாக ரபேல் உள்ளது. பிரான்ஸ் நாட்டிடம் இருந்து வாங்கப்பட்ட ரபேல், நான்காம் தலைமுறை போர் விமானம் ஆகும். உலகில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளிடம் மட்டுமே ரேடாரில் சிக்காத 5-ம் தலைமுறை போர் விமானங்கள் உள்ளன.
இந்நிலையில் இந்தியாவிலும் இத்தகைய போர் விமானங்களை தயாரிக்கும் திட்டத்துக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இரட்டை இன்ஜின் கொண்ட இந்த ஜெட் விமானம் தயாரிக்கும் திட்டத்தை மத்திய அரசின் ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சி (ஏடிஏ) செயல்படுத்த உள்ளது. எனவே இந்த விமானத்துக்கான முன்மாதிரியை உருவாக்கும் லட்சிய திட்டத்தில் பங்கேற்க முதல்கட்ட விருப்பத்தை தெரிவிக்குமாறு அரசு மற்றும் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களை ஏடிஏ விரைவில் கேட்டுக்கொள்ள உள்ளது.
“இத்திட்டம் உள்நாட்டு நிறுவனத்தால் மட்டுமே முன்னெடுக்கப்படும். அந்த நிறுவனம் தனித்து அல்லது கூட்டு முயற்சியாக மேற்கொள்ள அனுமதிக்கப்படும். பொதுத்துறை, தனியார் ஆகிய இரு தரப்பு நிறுவனங்களும் தங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம்” என பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சீனா தனது அதிநவீன ஜே-10 போர் விமானம் ஒன்றை பாகிஸ்தானுக்கு ஏற்கெனவே வழங்கியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு ரேடாரில் சிக்காத ஜே-35 போர் விமானம் ஒன்றை வழங்க முன்வந்துள்ளது. இந்த விமானத்தை தள்ளுபடி விலையில் பாகிஸ்தானுக்கு சீனா வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனா தனது விமானப் படையை விரிவுபடுத்தி வருவதுடன் பாகிஸ்தானுக்கு உதவ முன்வந்துள்ள நிலையில், உள்நாட்டிலேயே ரேடாரில் சிக்காத போர் விமானங்களை தயாரிக்கும் திட்டத்தை மத்திய அரசு விரைவுபடுத்த முடிவு செய்துள்ளது.