Fever: தமிழ்நாட்டில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல்; எப்படி பரவுகிறது; தடுக்க முடியுமா?

ப்பானிய மூளைக்காய்ச்சல் தமிழ்நாட்டிலும் பரவிக்கொண்டிருக்கிறது என்கிற ஆய்வு முடிவு ஒன்று கடந்த சில தினங்களாக பலருடைய கண்களிலும் தென்பட்டிருக்கும். விளைவாக, ‘ஏற்கெனவே கொரோனா பரவல் அதிகரித்து விட்டது என்கிற பயத்தில் இருக்கிறோம். இப்போது ஜப்பானிய மூளைக்காய்ச்சல் என்கிற புது வியாதியை சொல்லி பயப்படுத்துகிறீர்களே’ என்கிற பயம் பலருக்கும் ஏற்பட்டிருக்கும். பயத்தைத் தள்ளி வைத்துவிட்டு, காரணங்களையும் தீர்வுகளையும் தெரிந்துகொண்டால் வருமுன் தடுக்கலாமே… இதுதொடர்பாக சிவகங்கையைச் சேர்ந்த பொது மருத்துவர் ஃப்ரூக் அப்துல்லாவிடம் பேசினோம்.

க்யூலெக்ஸ் கொசு
க்யூலெக்ஸ் கொசு

”ஜப்பானிய மூளைக்காய்ச்சல் புதிய நோய் கிடையாது. ஜப்பானீஸ் என்சிபிலட்டீஸ் (Japanese encephalitis – JE) என்கிற பெயரில் ஆசிய நாடுகளுக்கு ஏற்கெனவே நன்கு அறிமுகமான நோய்தான் இது. ஜப்பானீஸ் என்சிபிலட்டீஸ் என்பது ஒரு வைரஸ். இந்த வைரஸ் க்யூலெக்ஸ் என்ற கொசுவிலும், பன்றிகளின் உடலிலும், சில பறவைகளின் உடலிலும் வாழக்கூடியது.

விவசாயம் செய்கிற கிராமப்பகுதிகளில் இந்த நோய் அதிகமாக தாக்கும். ஏன் தெரியுமா? விவசாயம் செய்யப்படுகிற இடங்களில் தண்ணீரைத் தேக்கி வைத்திருப்பார்கள். க்யூலெக்ஸ் கொசுக்கள் கிணறுகளில், வயல்வெளிகளில், பன்றிகளின் வாழ்விடங்களிலும்தான் வாழும்.

வைரஸ் தொற்று ஏற்பட்ட க்யூலெக்ஸ் கொசு கடித்தால்தான் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வரும். அதேபோல, இந்த மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களைக் கடித்த கொசு, ஆரோக்கியமாக இருக்கிற இன்னொருவரைக் கடித்தால் அவருக்கும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வரும். மற்றபடி, மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு பரவாது.

வைரஸ் தொற்று அடைந்த க்யூலெக்ஸ் கொசு கடித்தால் மட்டுமே இந்தத் தொற்று மனிதருக்குப் பரவும். டெங்கு, மலேரியா பரவுவதைப்போலதான் ஜப்பானிய மூளைக்காய்ச்சலும் பரவும்” என்றவரிடம் , அந்த ஆய்வில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நகரங்களுக்கும் பரவிக் கொண்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறதே என்றோம்.

வயல்வெளி
வயல்வெளி

”அதற்குக் காரணம் நகரங்கள் விரிவடைந்துக்கொண்டிருப்பது ஒரு காரணம். இன்னொரு காரணம், கிராமங்களில் வசிப்பவர்கள் நகரங்களுக்கு வருவதும், நகரங்களில் வசிப்பவர்கள் கிராமங்களுக்குச் செல்வதும் இப்போது அடிக்கடி நிகழ்கிற ஒன்றாகிவிட்டது. அதனால், இந்த கொசுக்கடி தொற்று பரவிக்கொண்டே இருக்கிறது.

இந்தக் காய்ச்சல் வந்தால் 99 சதவிகிதம் பேருக்கு, காய்ச்சல், தலைவலி, வாந்தி என்று சரியாகி விடும். ஒரு சதவிகிதம் பேருக்கு மட்டுமே இது நரம்பு மண்டலத்தை பாதிக்கலாம். இப்படி பாதிக்கப்பட்டால் காய்ச்சலின்போது பிதற்றுவார்கள்; கை, கால்கள் செயலிழந்து பக்கவாதம்போல ஏற்படலாம். பின்னர் வலிப்பு, கோமா, மரணம் என்று ஏற்படலாம். நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்ட அத்தனை பேருக்குமே இத்தனை பிரச்னைகளும் வருமா என்றால், இல்லவே இல்லை என்பதுதான் என்னுடைய பதில். இது அரிதிலும் அரிதாக மட்டுமே நிகழும்.

திடீரெனப் பரவும் காய்ச்சல்

திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, மதுரை, விருதுநகர், கரூர் போன்ற மாவட்டங்களில் இந்தத் தொற்று பரவிக்கொண்டிருக்கிறது என்கிறார் டாக்டர் ஃப்ரூக் அப்துல்லா.

அதே நேரம், இப்படி நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு, ஜப்பானிய மூளைக்காய்ச்சலின்போது வந்த வலிப்பு, பக்கவாதம், சிந்தனைத்திறன் குறைவுபடுதல் போன்ற பக்க விளைவுகள் வாழ்நாள் முழுவதும் தொடர்வதற்கு வாய்ப்பிருக்கிறது.

கொசுக்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இந்த நோய் வராமல் தடுக்க முடியும். ஆனால், வயல்வெளிகளில் இதைக் கட்டுப்படுத்துவது கடினம். வாரம் ஒரு நாளாவது நிலத்தில் தண்ணீர் பாய்ச்சாமல் விட வேண்டும். இதை இடைவிட்டு செய்யும் பாசனமுறை என்று அழைக்கிறோம். இதன் மூலம் கொசு உற்பத்தி ஆவதைக் கட்டுப்படுத்த முடியும். யூரியா உரத்தில் வேம்பைக் கலந்து போடுவதும் பயன் தரும்.

டாக்டர் ஃப்ரூக் அப்துல்லா
டாக்டர் ஃப்ரூக் அப்துல்லா

ஜப்பானிய மூளைக்காய்ச்சலை தடுப்பூசி மூலம் வராமல் கட்டுப்படுத்தலாம். முதல் டோஸ் குழந்தையின் 9-வது மாதத்திலும், இரண்டாவது டோஸை 16 முதல் 24-வது மாதத்துக்குள்ளும் செலுத்திவிட வேண்டும். தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும், அது மரணம் வரைக்கும் ஏற்படுத்தாது. இந்தத் தடுப்பூசிகள் தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்களின் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகிறது” என்கிற கூடுதல் தகவலையும் சொல்கிறார் டாக்டர் ஃப்ரூக் அப்துல்லா.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.