India A vs England Lions Live Telecast: இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஜூன் – ஆகஸ்ட் மாதங்களில் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. எப்போதும் இந்திய அணி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும் முன் அங்கு இந்திய ஏ அணியும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சில போட்டிகளில் விளையாடும்.
India A vs England Lions: 2 போட்டிகளில் விளையாடும் இந்தியா ஏ அணி
அந்த வகையில், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான 2 அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளை விளையாட 20 பேர் கொண்ட இந்திய ஏ அணியும் சில நாள்களுக்கு முன்னால் அறிவிக்கப்பட்டது. அபிமன்யூ ஈஸ்வரன் கேப்டனாகவும், துருவ் ஜூரேல் துணை கேப்டனாகவும் செயல்படுகின்றனர். சுப்மான் கில், சாய் சுதர்சன் ஆகியோர் மட்டும் முதல் போட்டியில் விளையாட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதல் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி கேன்டர்பரியில் உள்ள செயிண்ட் லாரன்ஸ், ஸ்பிட்ஃபயர் மைதானத்தில் நாளை (மே 30) முதல் ஜூன் 2ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்திய ஏ அணியில் இளம் வீரர்கள் மட்டுமின்றி சில அனுபவ வீரர்களும் உள்ளனர்.
India A vs England Lions: 9 முக்கிய வீரர்கள்
இந்திய ஏ அணியில் உள்ள அபிமன்யூ ஈஸ்வரன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், துருவ் ஜூரேல், நிதிஷ் குமார் ரெட்டி, ஷர்துல் தாக்கூர், ஆகாஷ் தீப், கில், சாய் சுதர்சன் உள்ளிட்ட 9 வீரர்கள் பிரதான இந்திய ஸ்குவாடிலும் இடம்பெற்றுள்ளனர். ருதுராஜ் கெய்க்வாட், சர்ஃபராஸ் கான், தனுஷ் கோட்டியான், இஷான் கிஷன், ஹர்ஷித் ராணா, கலீல் அகமது ஆகியோரும் சீனியர் அணியில் இடம்பிடிக்க முட்டிமோதுவார்கள்.
India A vs England Lions: SonyLiv-இல் பார்க்க முடியாது
இங்கிலாந்து லயன்ஸ் vs இந்தியா ஏ அணிகளுக்கு இடையிலான முதல் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி நாளை (மே 30) தொடங்கும் நிலையில், பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அந்த வகையில், இப்போட்டியை எப்போது, எப்படி பார்ப்பது என்ற கேள்வியும் அதிகமாக எழுகிறது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தியா – இங்கிலாந்து தொடர் Sony Sports Network சேனல்களிலும், SonyLiv தளத்திலும் ஒளிபரப்பாகிறது. ஆனால், இங்கிலாந்து லயன்ஸ் vs இந்தியா ஏ அணிகளுக்கு இடையிலான போட்டிகள் Sony Sports சேனலில் ஒளிபரப்பாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
India A vs England Lions: ஜியோஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்
ஆனால், இந்த இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகள் மட்டும் Star Sports 1 and 2 சேனல்களிலும், ஜியோஹாட்ஸ்டார் தளத்திலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) இணையதளத்திலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மேலும், இந்த போட்டிகள் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
India A vs England Lions: இரு அணிகளின் ஸ்குவாட்
இந்திய ஏ அணி: அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், துருவ் ஜூரல் (துணை கேப்டன்) (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, ஷர்துல் தாக்குர், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), மானவ் சுதர், தனுஷ் கோட்டியன், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், அன்ஷூல் காம்போஜ், ஹர்ஷித் ராணா, ருதுராஜ் கெய்க்வாட், சர்பராஸ் கான், துஷார் தேஷ்பாண்டே, ஹர்ஷ் துபே.
இங்கிலாந்து லயன்ஸ்: ஜேம்ஸ் ரெவ் (கேப்டன்), ஃபர்ஹான் அகமது, ரெஹான் அகமது, சோனி பேக்கர், ஜோர்டான் காக்ஸ், ராக்கி பிளின்டாஃப், எமிலியோ கே, டாம் ஹெய்ன்ஸ், ஜார்ஜ் ஹில், ஜோஷ் ஹல், எடி ஜாக், பென் மெக்கின்னி, டான் மௌஸ்லி, அஜீத் சிங் டேல், கிறிஸ் வோக்ஸ், மேக்ஸ் வோல்டன்ஸ்.