மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து சமீபத்தில் விடைபெற்றார். இந்திய அணிக்காக கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன அவர் 123 போட்டிகளில் விளையாடி அதில் 30 சதம் உட்பட 9,230 ரன்கள் குவித்துள்ளார்.
மேலும் 68 போட்டிகளில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ள விராட் அதில் 40 போட்டிகளை வென்று கொடுத்து இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டனாகவும் வரலாறு படைத்துள்ளார்.
குறிப்பாக தோனிக்குப்பின் கேப்டன் பதவியை ஏற்ற விராட் கோலி இந்திய அணியை பல வருடங்கள் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை அலங்கரிக்க வைத்தார். ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய கேப்டன் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.
அப்படிப்பட்ட அவர் அடுத்த மாதம் தொடங்க உள்ள இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் 36 வயதிலேயே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது பலரது மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் ஏன் அதற்குள் ஓய்வு பெற்றீர்கள்? என்று விராட் கோலிக்கு தம்முடைய 8-வயது மகள் ஹினாயா மெசேஜ் செய்து கேட்டதாக இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். அதற்கு “ஓய்வு பெறும் நேரம் வந்து விட்டது குழந்தையே” என்று தன்னுடைய மகளுக்கு விராட் கோலி பதில் மெசேஜ் செய்ததாகவும் ஹர்பஜன் கூறியுள்ளார்.
இது குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- “விராட் கோலி ஏன் நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றீர்கள்? என்று நான் எக்ஸ் பக்கத்தில் கேட்டேன். என் மகள் கூட, ‘அப்பா, விராட் ஏன் ஓய்வு பெற்றார்கள்?’ என்று என்னிடம் கேட்டாள்’. சொல்லப்போனால் அவள் விராட் கோலிக்கு மெசேஜ் செய்து, ‘இது ஹினாயா, விராட் நீங்கள் ஏன் ஓய்வு பெற்றீர்கள்?’ என்று கேட்டாள். அதற்கு விராட் கோலி சிரித்துக் கொண்டே, ‘குழந்தையே, இது விடை பெறுவதற்கான நேரம்’ என்று என்னுடைய மகளுக்கு பதில் கொடுத்தார். இதுவே ஓய்வுக்கான சரியான நேரம் என்பது அவருக்கு தெரியும்” என்று கூறினார்.