ஈ சாலா கப் RCB-க்கு தான்! இந்த வீரரின் ராசி அப்படி… 6 பைனல்களில் தோற்றதே இல்லை!

IPL 2025 Royal Challengers Bangalore: ஐபிஎல் 2025 தொடரின் கிளைமேக்ஸ் நெருங்கி வருகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் முதல் கிரிக்கெட்டே பார்க்காதவர்கள் வரை இந்த வருட ஐபிஎல் இறுதிப்போட்டிக்காக காத்திருக்கின்றனர். காரணம், ஆர்சிபி 9 வருடங்களுக்கு பின்னர் இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருக்கிறது. 

RCB: ஆர்சிபி அணியின் 18 வருட தவம்

2008ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக 17 ஆண்டுகளாக ஒருமுறை கூட ஆர்சிபி ஐபிஎல் கோப்பையை கையில் ஏந்தியது கிடையாது. 2024இல் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட்டில் கோப்பை கிடைத்தாலும் கூட ஆடவர் ஐபிஎல் தொடரில் ஒரு கோப்பைக் கூட கிடைக்காதது அந்த அணியின் ரசிகர்களுக்கு இத்தனை வருடங்களாக பெரும் ஏமாற்றத்தை அளித்து வந்தது.

இதற்கு முன் 2009, 2011, 2016 ஆகிய மூன்று சீசன்களில் ஆர்சிபி அணி இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது. அதில் முறையே டெக்கான் சார்ஜர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுடன் தோல்வியடைந்து கோப்பையை வெல்லும் வாய்ப்புகளை இழந்தன. அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி, விராட் கோலியை தொடர்ந்து ரஜத் பட்டிதாரும் ஆர்சிபியை இறுதிப்போட்டிக்கு அழைத்து வந்துவிட்டார்.

RCB: ஆர்சிபிக்கு சாதகமான புள்ளிவிவரம்

ஐபிஎல் 18வது ஆண்டில், அதாவது விராட் கோலியின் ஜெர்ஸி எண் 18 என்பதால் இந்த சீசனில்தான் ஆர்சிபி நீண்ட நாள் கனவு நினைவாகப்போகிறது என பல ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதேபோல், 2011, 2012, 2013, 2014, 2015, 2018, 2021, 2023 ஆகிய ஆண்டுகளில் லீக் சுற்றின் முடிவின் 2வது இடத்தை பிடித்த அணியே கோப்பையை வென்றிருக்கிறது. 

அதாவது, ஐபிஎல் தொடரில் பிளே ஆப் முறை அறிமுகப்படுத்தப்பட்டு இதுவரை விளையாடப்பட்ட 14 சீசன்களில் 8 முறை 2வது இடத்தை பிடித்த அணிதான் கோப்பை வென்றிருக்கிறது. அந்த வகையில், இந்த முறை லீக் சுற்று முடிவில் 2வது இடத்தை பிடித்த ஆர்சிபி அணிதான் கோப்பையை அடிக்கும் என ரசிகர்கள் தங்களின் ஆருடத்தை தெரிவித்து வருகின்றனர்.

RCB: ஜோஷ் ஹசில்வுட்டும்… இறுதிப்போட்டிகளும்…

இது ஒருபுறம் இருக்க, ஜோஷ் ஹசில்வுட்டுக்கும் இறுதிப்போட்டிக்கும் இருக்கும் ஒரு அற்புதமான காதல் கதையையும் பலரும் பகிர்ந்து வருகிறார்கள். இதுவரை ஜோஷ் ஹேசில்வுட் ஒரு ஐபிஎல் இறுதிப்போட்டி உள்பட மொத்தம் 6 இறுதிப்போட்டிகளில் விளையாடி உள்ளார். 

2012ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காகவும், 2015 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்காகவும், 2020 பிபிஎல் தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காகவும், 2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காகவும், 2021 டி20 உலகக் கோப்பை மற்றும் 2023 உலகக் கோப்பை தொடர்களில் ஆஸ்திரேலிய அணிக்காகவும் என ஹேசில்வுட் இதுவரை விளையாடிய 6 இறுதிப்போட்டிகளிலும் அவர் விளையாடிய அணி தோற்றதே இல்லை.

RCB: ஹேசில்வுட் ஆர்சிபியின் பொக்கிஷம்

அந்த வகையில், தற்போது ஹேசில்வுட் தனது 7வது இறுதிப்போட்டியை வரும் செவ்வாய்கிழமை (ஜூன் 3) அன்று விளையாடப்போகிறார். இதன்மூலம் ஆர்சிபிக்கு கோப்பையும் கிடைக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். ஹேசில்வுட்தான் இந்த சீசனில் ஆர்சிபிக்கு கிடைத்த பொக்கிஷம் எனலாம். 

இந்த சீசனில் 1 போட்டிகில் விளையாடி 21 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். தற்போது பர்பிளே கேப் ரேஸில் 3வது இடத்தில் உள்ளார். இவரது வருகையால் ஆர்சிபி பவர்பிளே ஓவர்களிலும் சரி, டெத் ஓவர்களிலும் சரி பந்துவீச்சில் பலம் பெற்றிருக்கிறது. எனவே, இந்த ஐபிஎல் 18வது சீசன் ஆர்சிபிக்கு என எழுதிவிடலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.