இந்தியாவின் புகழ்பெற்ற புலிகள் பாதுகாப்பு ஆர்வலர் வால்மிக் தாபர் காலமானார்

புது டெல்லி: இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற வனவிலங்கு பாதுகாவலர்கள் மற்றும் எழுத்தாளர்களில் ஒருவரான வால்மிக் தாபர் சனிக்கிழமை காலை டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 73.

1952 ஆம் ஆண்டு புது டெல்லியில் பிறந்தவர் தாபர். தாபரின் தந்தை ரோமேஷ் தாபர் ஒரு பிரபலமான பத்திரிகையாளர். அவரது அத்தை வரலாற்றாசிரியர் ரோமிலா தாபர். அவர் தி டூன் பள்ளியில் பயின்றார். பின்னர் செயிண்ட் ஸ்டீபன் கல்லூரியில் சமூகவியல் பயின்றார். அதில் தங்கப் பதக்கமும் பெற்றார்.

தாபர் நடிகர் சஷி கபூரின் மகள் அதாவது நாடகக் கலைஞரான சஞ்சனா கபூரை மணந்தார், அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சிறு வயதில் இருந்து புலிகளை பற்றி படிப்பது மற்றும் ஆராய்ச்சி செய்வதில் அவருக்கு ஆர்வம் இருந்துள்ளது. சில காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சனிக்கிழமை காலை டெல்லியில் காலமானார்.

ராஜஸ்தானின் ரந்தம்போர் தேசிய பூங்காவில் உள்ள புலிகளின் ஆய்வு மற்றும் பாதுகாப்பிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். தாபரின் பெரும்பாலான களப்பணிகள் ராஜஸ்தானை மையமாகக் கொண்டிருந்தன, அத்துடன், மகாராஷ்டிராவின் தடோபா-அந்தாரி புலிகள் காப்பகத்தை மீட்டெடுப்பதிலும் முக்கிய பங்கு வகித்தார்.

தாபர் 32 புத்தகங்களை எழுதியுள்ளார், அதில் ஆப்பிரிக்க வனவிலங்குகள் பற்றிய நான்கு புத்தகங்களும் அடங்கும். தாபர், பிரதமர் தலைமையிலான தேசிய வனவிலங்கு வாரியம் உட்பட 150 க்கும் மேற்பட்ட அரசு குழுக்கள் மற்றும் பணிக்குழுக்களில் ஈடுபட்டார். பிபிசி, அனிமல் பிளானட், டிஸ்கவரி மற்றும் நேஷனல் ஜியோகிராஃபிக் போன்ற ஊடகங்களுக்காக இந்தியாவின் இயற்கை வாழ்விடங்கள் குறித்த ஆவணப்படங்களைத் தயாரித்து கொடுத்துள்ளார்.

இந்தியாவின் புலி மனிதர் ‘Tiger Man’ என அழைக்கப்படும்,தாபரின் மறைவுச் செய்தியைத் தொடர்ந்து அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.