பல் சிகிச்சை எடுத்துகொண்ட 8 பேர் மரணம்… சர்ச்சையில் வாணியம்பாடி கிளினிக் – நடந்தது என்ன?

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பி.ஜே.என்.நேரு சாலையில், `வி.டி.எஸ் – அறிவு பல் மருத்துவமனை’ என்கிற பெயரில், தனியார் கிளினிக் செயல்பட்டுவந்தது. இங்கு வாணியம்பாடி நியூடவுன் பகுதியைச் சேர்ந்த இந்திராணி (வயது 53) என்பவர் கடந்த 2022-ல் பல் வலிக்காக சிகிச்சை எடுத்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, பல் பிடுங்கப்பட்டதில் இந்திராணிக்கு முகம் வீக்கமாகி உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. பிறகு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்திராணி 2023 ஏப்ரல் 16-ம் தேதி உயிரிழந்துவிட்டாராம். “வாணியம்பாடி பல் மருத்துவரின் தவறான சிகிச்சையால்தான் தொற்றுப் பாதிப்புக்குள்ளாகி இந்திராணி இறந்துவிட்டார்’’ எனக் குற்றம்சாட்டி, இந்திராணியின் மகன் ஸ்ரீராம் என்பவர் வாணியம்பாடி நகரக் காவல் நிலையம் தொடங்கி, மருத்துவ அதிகாரிகள், முதலமைச்சரின் தனிப்பிரிவு வரை புகார்களை அனுப்பிக்கொண்டிருந்தார்.

பல் சிகிச்சை

இது தொடர்பாக, வேலூர் சி.எம்.சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில், தமிழ்நாடு பொது சுகாதார இயக்குநரகம் ஆகியவற்றைக்கொண்ட மருத்துவக் குழுவும் விசாரணை நடத்தியது. இதில், குறிப்பிட்ட அந்த தனியார் பல் கிளினிக்கில் சிகிச்சை பெற்றவர்களில் 10 பேருக்கு மூளையில் தொற்றும், மேலும் 10 பேருக்கு பாக்டீரியா தொற்றும் ஏற்பட்டு அதில் 8 பேர் அடுத்தடுத்த 6 மாதக் காலத்துக்குள்ளாக இறந்துவிட்டதாகத் தெரியவந்ததாகவும், சுகாதாரமற்ற அசுத்தமான மருத்துவ உபகரணங்களைப் பயன்படுத்தியதே மரணங்களுக்கான காரணம் எனவும், இது சம்பந்தமாக அறிக்கை வெளியிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, சர்ச்சைக்குள்ளான சம்பந்தப்பட்ட கிளினிக் வாணியம்பாடி பி.ஜே.என்.நேரு சாலையில் இருந்து வாணியம்பாடி மண்டி தாதேமியான் தெருவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு இயங்கிவருகிறது.

இந்த நிலையில், மருத்துவக் குழுவினரின் அறிக்கையுடன் தாயை இழந்த ஸ்ரீராம் நேற்று முன்தினம் மீண்டும் வாணியம்பாடி நகரக் காவல் நிலையம் சென்று சம்பந்தப்பட்ட பல் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகாரளித்தார். ஏற்கெனவே, இந்த விவகாரத்தில் அந்த மருத்துவருடன் ஏற்பட்ட தகராறில் ஸ்ரீராம் இருமுறை கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த முறை, மருத்துவ அறிக்கையைக் கையில் வைத்துகொண்டு ஸ்ரீராம் தனது தாயின் மரணத்துக்கு நீதி வேண்டும் என கொதித்தெழுந்திருக்கிறார். இதைத்தொடர்ந்து, புகாருக்குள்ளான தனியார் கிளினிக்கில் மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் ஞானமீனாட்சி நேற்று ஆய்வு கொண்டார்.

பல் சிகிச்சை

இதைத்தொடர்ந்து, தன் மீதான சர்ச்சைப் புகார் குறித்து பல் மருத்துவர் அறிவரசன் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமொன்றையும் அளித்திருக்கிறார். அதில், “ஸ்ரீராம் அவரின் தாய் இறந்த பிறகு எங்களின் கிளினிக்கை முற்றுகையிட்டு போராட்டம் செய்தார். இதனால், கிளினிக் ஒன்றரை மாதமாக மூடப்பட்டிருந்தது. மூடப்பட்டிருந்த கிளினிக்கில் இருந்து தமிழக பொது சுகாதார இயக்குநரகம் மற்றும் வேலூர் தனியார் மருத்துவக்குழுவினர், கிளினிக்கில் பயன்படுத்தப்பட்ட கருவிகளையும், உபகரணங்களையும் பரிசோதனை செய்து ஆய்வுக்காக எடுத்துசென்றுள்ளனர். பல் கிளினிக்கில் எடுக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனைகள் குறித்து முழுமையான அறிக்கையை மருத்துவக்குழுவினர் எங்களிடம் சமர்பிக்கவில்லை. தமிழக பொது சுகாதார இயக்குநரகம் மற்றும் வேலூர் தனியார் மருத்துவக்குழுவினர் வெளியிட்ட ஆய்வறிக்கை முற்றிலும் தவறானது’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.