கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரின் சிறப்பான ஆட்டத்தால் பஞ்சாப் கிங்ஸ் அணி ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை இரண்டாவது குவாலிபயரில் வீழ்த்தி பைனலுக்கு முன்னேறி உள்ளது. 2014ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு முறை கூட பைனலுக்கு செல்லாத பஞ்சாப் கிங்ஸ் அணியை ஷ்ரேயாஸ் ஐயர் தனது தலைமையில் கூட்டிச் சென்றுள்ளார். ஜூன் மூன்றாம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயரின் தலைமையில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரஜத் பட்டிதார் தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாட உள்ளனர். முதல் குவாலிபயரில் ஆர்சிபி அணி பஞ்சாப்பை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தது.
pic.twitter.com/Ehe6sR9YeF
— Punjab Kings (@PunjabKingsIPL) June 1, 2025
நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டி, மழையால் தாமதமாகவே தொடங்கியது. டாஸ் வென்ற கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பில்டிங் தேர்வு செய்தார். மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் பேர்ஸ்டோ, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், நமந்தீர் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் ஆடி ஒவ்வொரு ஓவர்களிலும் ஒரு பவுண்டரி அல்லது சிக்ஸர்களை அடித்தனர். இதனால் 20 ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. 204 ரன்கள் வெற்றி என்ற நிலையில் களமிறங்க பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடி வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார். 41 பந்துகளில் 8 சிக்ஸ் மற்றும் 5 பவுண்டரிகள் உட்பட 89 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஒரு சிக்சருடன் போட்டியை முடித்து வைத்து, தான் ஒரு சிறந்த கேப்டன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.
தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொண்ட ஹர்திக் பாண்டியா
போட்டி முடிந்த பிறகு பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, “ஷ்ரேயாஸ் பேட்டிங் செய்த விதம், வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டது, அவர் விளையாடிய சில ஷாட்கள் மிகவும் சிறப்பாக இருந்தன. அவர்கள் நிச்சயமாக நன்றாக பேட்டிங் செய்தார்கள் என்று நினைக்கிறேன். அது சமமாக இருந்தது என்று நினைக்கிறேன், ஆனால் ஒரு பந்துவீச்சுப் பிரிவாக அதற்கு சில சிறந்த செயல்திறன் தேவைப்பட்டது, இந்த பெரிய ஆட்டங்களில் அது மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். நான் குறிப்பிட்டது போல் அவர்கள் மிகவும் நிதானமாக இருந்தார்கள், எங்களை அழுத்தத்தில் ஆழ்த்தினர்.
நாங்கள் விரும்பிய வழியில் செயல்பட முடியவில்லை என்று நினைக்கிறேன். என்னால் சரியான நேரத்தில் விக்கெட்களை எடுக்க முடியவில்லை. நாங்கள் ஏதாவது சிறப்பாகச் செய்ய வேண்டியிருந்தால், அது யாரோ ஒருவர் சரியான லென்த்தில் பந்து வீசியிருக்கலாம் அல்லது சரியான புள்ளியில் பந்து வீசி இருந்தால் முடிவு கொஞ்சம் வித்தியாசமாக இருந்திருக்கும். பின்னோக்கிப் பார்த்தால், அது வித்தியாசமாக இருந்திருக்கும். 4 ஓவர்களில் 41 ரன்கள் தேவைப்படும் நிலையில் பும்ராவை வீசியிருக்க வேண்டுமா? அதுவும் மிக விரைவில் நடந்திருக்கும். பும்ரா சிறந்த பந்துவீச்சாளர். ஆனால் இன்று எதுவும் சரியாக நடக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.