திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கண்ணூர் போடூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்(வயது 44). இவருடைய மனைவி ரம்யா (37). இவர்களுக்கு மொத்தம் 10 குழந்தைகள் உள்ளனர். அவர்களில் 8 பேர் பெண் குழந்தைகள், 2 பேர் ஆண் குழந்தைகள் ஆவர். 9 குழந்தைகள் பள்ளிக்கு செல்கிறார்கள். முதலாவது மகளான அல்பியா 12-ம் வகுப்பு வகுப்பு படிக்கிறாள். இரண்டாவது மகள் ஆக்னஸ் மரியா 10-ம் வகுப்பும், மூன்றாவது மகள் ஆன் கிளேர் 8-ம் வகுப்பும் படிக்கின்றனர். இவர்கள் 3 பேரும் ஒரு பள்ளியில் படித்து வருகிறார்கள்.
நான்காவது குழந்தையான அசின் தெரேஸ் 6-ம் வகுப்பும். ஐந்தாவது குழந்தையான லியோ டாம் 4-ம் வகுப்பும். ஆறாவது குழந்தையான லெவின்ஸ் அந்தோணி 2-ம் வகுப்பும், ஏழாவது குழந்தை கேத்தரின் ஜோகிமா தலகானி யு.கே.ஜியும் படிக்கின்றனர்.இரட்டையர்களான எட்டாவது மற்றும் ஒன்பதாவது குழந்தைகள் ஜியோ வானாமரியா-கியானா ஜோசபினா ஆகியோர் அங்கன்வாடி மையத்திற்கு செல்கிறார்கள். இப்படியாக சந்தோஷ்-ரம்யா தம்பதியரின் 9 குழந்தைகள் 12-ம் வகுப்பு முதல் அங்கன்வாடி வரை “செல்கிறார்கள். பத்தாவது குழந்தையான அன்னா ரோஸ்லியா 3 மாத குழந்தைதான்.
சந்தோஷ் கண்ணூரில் பல முன்னணி வணிக நிறுவனங்களை நடத்தி வருகிறார். அவரது மனைவி ரம்யா குடும்பத்தலைவியாக இருக்கிறார். குழந்தைகளை வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்ட அவர்கள், வரிசையாக குழந்தை பெற்றபடி இருந்திருக்கிறார்கள். இதன் காரணமாக தற்போது அவர்களுக்கு 10 குழந்தைகள் இருக்கின்றனர்.
“குழந்தைகளை கவனிப்பதற்காக சத்திஸ்கர் மாநிலத்தை சேர்ந்த அஞ்சிதா என்ற பெண், பணியாளராக இருக்கிறார். மேலும் குழந்தைகளை அவர்களது பாட்டியும் கவனத்துக் கொள்கிறார். இதனால் 10 குழந்தைகளை வளர்ப்பது சந்தோஷ்-ரம்யா தம்பதிக்கு பெரிய விஷயமாக இல்லை.தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கிவிட்டதால் 9 குழந்தைகளும் பள்ளிக்கு செல்கிறார்கள். அவர்களுக்கு உணவு தயாரிப்பதற்காக அவர்களது வீட்டு சமையலறை தினமும் அதிகாலை 5 மணிக்கே செயல்பட தொடங்கி விடுகிறது. அனைத்து குழந்தைகளுக்கும் தேவையைான உணவுகளைகளை தயார் செய்து முடிக்க காலை 7 மணியாகி விடுகிறது.
காலை மற்றும் மதியத்துக்கு என இரு வேளைகளுக்கும் தனித்தனி உணவு தயாரிக்கப்படுகிறது. மதிய உணவை 9 குழந்தைகளும் எடுத்துச் செல்ல தனித்தனியாக பேக்குகள் இருக்கின்றன. அவற்றில் பெண் பணியாளர் உணவை வைத்து விடுகிறார்.9 குழந்தைகளையும் கிளப்பி பள்ளிக்கு அனுப்பும் பணியில் சந்தோஷ்-ரம்யா தம்பதி, குழந்தைகளின் பாட்டி மற்றும் பெண் பணியாளர் ஆகியோர் இணைந்து ஈடுபடுகின்றனர். மேலும் பள்ளிக்கு கிளம்புவதில் குழந்தைகள் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்கின்றனர்.மூத்த குழந்தைகள் இளைய குழந்தைகள் புத்தகங்களை தவறாமல் எடுத்துச்செல்ல உதவுகிறார்கள். பள்ளிக்கு குழந்தைகள் கிளம்பும் காலை நேரத்தில் அந்த வீடு மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது.
காலை 8.30 மணிக்கு அவர்களது வீட்டின் முன் வரக்கூடிய பள்ளி வாகனங்களில் ஒவ்வொரு குழந்தைகளாக ஏறி பள்ளிக்கு செல்கிறார்கள். அவர்களை பத்தாவது குழந்தை உற்சாகமாக கைகளை அசைத்து வழியனுப்பி வைக்கிறது. 9 குழந்தைகளும் பள்ளிக்கு சென்றதும் வீட்டில் குழந்தைகள் சத்தம் எதுவும் இல்லாமல் அமைதி நிலைக்கு செல்கிறது. மாலை வீட்டுக்கு வந்ததும் மீண்டும் குழந்தைகளின் கூச்சல் மற்றும் சிரிப்பு சத்தங்களால் வீடு மீண்டும் உயிர் பெறுகிறது.
ரம்யாவுக்கு முதல் மூன்று பிரசவங்களும் இயற்கையாக நடந்திருக்கிறது. அதன் பிறகு குழந்தைகள் பிறக்க சிசேரியன் செய்ய வேண்டி வந்தது.10 குழந்தைகள் இருப்பதை பார்த்த பலர் உங்களுக்கு இத்தனை பிள்ளைகளா? என கேள்வி எழுப்பும்போது, “கடவுளின் பரிசுகளை நிராகரிப்பது பாவம். எங்கள் பிள்ளைகள் வளர வளர எங்கள் வியாபாரமும் வளர்ந்தது” என்று சிரித்துக் கொண்டு கூறுவதே ரம்யாவின் பதிலாக இருக்கிறது. ஒரே வீட்டில் இருந்து 9 குழந்தைகள் மிகவும் ஒற்றுமையாகவும், சந்தோஷமாகவும் பள்ளிக்கு செல்வதை அந்தபகுதியை சேர்ந்தவர்கள் தினமும் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.