கேப்டன் கேஎல் ராகுலுடன் அணி நிர்வாகத்திற்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஒட்டுமொத்தமாக அணியை மாற்றியது எல்எஸ்ஜி. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சில நல்ல வீரர்களை அணியில் தேர்வு செய்து இருந்தது. இருப்பினும் அவர்களால் இந்த ஆண்டும் கோப்பையை வெல்ல முடியவில்லை. இந்த ஆண்டு விளையாடிய 14 போட்டிகளில் வெறும் 6 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். ஆரம்பத்தில் வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் டாப்பில் இருந்தாலும் சீசன் முடியும் போது 7வது இடத்தை தான் பிடித்திருந்தனர். இதன் காரணமாக அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அணியில் சில அதிரடி முடிவுகளை எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிங்க: ஈ சாலா கப் நம்து: ஆர்சிபி Celebration போட்டோஸ்!
அணி நிர்வாகத்தில் ஏற்படும் மாற்றங்கள்
ஐபிஎல் 2025ல் மோசமாக விளையாடியதன் காரணமாக அணி நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்ய சஞ்சீவ் கோயங்கா முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி அணியின் ஆலோசகராக இருக்கும் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கான் நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஜாகீர்கான் லக்னோ அணியின் ஆலோசகராக பணிபுரிந்தார். ஒரு வருட ஒப்பந்தத்தில் அவர் இருப்பதால் மீண்டும் நீடிக்கப்படுவாரா என்பது சந்தேகமே. மேலும் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ஜஸ்டின் லாங்கரும் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு லக்னோ அணியில் இணைந்தார் ஜஸ்டின் லாங்கர். இருப்பினும் தொடர்ந்து இரண்டு முறை தோல்விகளை சந்தித்துள்ளனர். இதனால் அவரது ஒப்பந்தமும் நீடிக்கப்படுவது சந்தேகமே.
ரிஷப் பந்த் நீக்கப்படுவாரா?
இந்த ஆண்டு லக்னோ அணியின் தோல்விக்கு மற்றொரு முக்கிய காரணம் கேப்டன் ரிஷப் பந்த் தான். ஐபிஎல் ஏலத்தில் யாருமே எதிர்பார்க்காத விதமாக 27 கோடிக்கு லக்னோ அணியால் எடுக்கப்பட்டார் ரிஷப் பந்த். ஐபிஎல் வரலாற்றில் மிகவும் அதிக விலைக்கு ஏலம் போன வீரரும் இவர் தான். ஆனால் இந்த சீசன் முழுக்கவே பேட்டிங் செய்ய மிகவும் சிரமப்பட்டார் ரிஷப் பந்த். ஒரு சில போட்டிகளில் அவருக்கு முன்னால் பவுலர்கள் கூட இறங்கி பேட்டிங் செய்தனர், ஆனால் பந்த் பேட்டிங் செய்ய வரவில்லை. 13 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் மற்றும் ஒரு அரை சதம் மட்டுமே அடித்துள்ளார். எனவே அவரை ஏலத்தில் விட்டு குறைந்த தொகையில் மீண்டும் எடுக்கலாமா என்று லக்னோ ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் புதிதாக இணைந்த லக்னோ மூன்று சீசன்களாக கோப்பையை வெல்ல போராடி வருகிறது.
மேலும் படிங்க: மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.. கர்நாடக துணை முதலமைச்சர்!