Virat Kohli : ஆர்சிபி அணியின் ஐபிஎல் 2025 சாம்பியன் வெற்றிக் கொண்டாட்டம் பெரும் துயரச் சம்பவமாக மாறியது. பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே ரசிகர்கள் பெருமளவு குவிந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த கோர துயர சம்பவத்துக்கு நாட்டின் முக்கிய தலைவர்கள் முதல் கிரிக்கெட் வீரர்கள் வரை எல்லோரும் தங்களின் அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் ஆர்சிபி அணியின் அடையாளமாக உள்ள விராட் கோலி இந்த சம்பவத்துக்கு எந்த ரியாக்ஷனும் இதுவரை கொடுக்கவில்லை. பெரும் அமைதி காத்து வருகிறார். இதனால் ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
பெங்களுரு துயரச் சம்பவம்
ஆர்சிபி அணி ஐபிஎல் 2025 இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதனைத் தொடர்ந்து நேற்று மாலை அதாவது ஜூன் 4 ஆம் தேதி புதன்கிழமை ஆர்சிபி அணியின் கோட்டையான பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்க ரசிகர்கள் குவியத் தொடங்கினர். கட்டுக்கடங்காமல் கூட்டம் குவிந்ததால் காவல்துறையினரால் கூட ஏதும் செய்யமுடியவில்லை. அதேநேரத்தில் மைதானத்துக்குள் நுழைவதற்கான நுழைவு வாயில் அடைக்கப்பட்டிருந்ததால் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் கேட்டை உடைத்து தள்ளிக் கொண்டு உள்ளே செல்ல முயன்றனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஆர்சிபி ரசிகர்கள் 11 பேர் உயிரிழப்பு
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அறியாத ஆர்சிபி அணி சின்னசாமி மைதானத்தில் தொடர்ச்சியாக வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது. காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். கர்நாடக முதலைமச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் இச்சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்தனர்.
ஆர்சிபி இழப்பீடு அறிவிப்பு
இதேபோல் ஆர்சிபி அணியும் உயிரிழந்த வர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது. ஆனால் அந்த அணியின் பிளேயர்கள் யாரும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த சம்பவத்துக்கு எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் உள்ளனர். குறைந்தபட்சம் தங்களின் அனுதாபங்களைக் கூட பகிராமல் உள்ளனர். சீனியர் பிளேயரான விராட் கோலி ஆர்சிபி அணியின் சோஷியல் மீடியா பதிவை மட்டும் பகிர்ந்தார். இவ்வளவு பெரிய கோர சம்பவத்துக்கு தனிப்பட்ட அனுதாப பதிவு கூட அவர் போடவில்லை. இதனால் கடுப்பாகியுள்ள ரசிர்கள் விராட் கோலியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
மேலும் படிங்க: ஈ சாலா கப் நம்து: ஆர்சிபி Celebration போட்டோஸ்!
மேலும் படிங்க: மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.. கர்நாடக துணை முதலமைச்சர்!