புதுடெல்லி: திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, பிஜு ஜனதா தளம் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி பினாகி மிஸ்ராவை மே 3 அன்று ஜெர்மனியின் பெர்லினில் நடந்த எளிமையான விழாவில் திருமணம் செய்து கொண்டார்.
மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணாநகர் எம்.பி.யாக உள்ள மஹுவா மொய்த்ரா, ஒடிசாவின் பூரி தொகுதியின் முன்னாள் எம்.பியான பினாகி மிஸ்ராவை மணந்தார். 50 வயதான மஹுவா மொய்த்ராவும், 65 வயதான பினாகி மிஸ்ராவும் திருமண உடையுடன் கைகோத்து புன்னகைத்துக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
நாடாளுமன்றத்தில் தனது அனல் பறக்கும் உரைகளுக்கு பெயர் பெற்ற மஹுவா மொய்த்ரா, மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகர் தொகுதியிலிருந்து இரண்டாவது முறையாக எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்.பி.யாக இருந்த அவர் 2023-ம் ஆண்டில் “கேள்விக்குப் பணம் பெற்ற” குற்றச்சாட்டுகளுக்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
அக்டோபர் 12, 1974-ல் அசாமில் பிறந்த மஹுவா மொய்த்ரா ஒரு முதலீட்டு வங்கியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் 2010-ல் மம்தா பானர்ஜியின் கட்சியில் சேர்ந்தார். மொய்த்ரா 2019-ல் மேற்கு வங்கத்தில் உள்ள கிருஷ்ணாநகர் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர் அவர் 2024-ல் மீண்டும் அதே தொகுதியிலிருந்து எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஒடிசாவின் பூரியில் அக்டோபர் 23, 1959-இல் பிறந்த பினாகி மிஸ்ரா, ஒரு மூத்த அரசியல்வாதி மற்றும் மூத்த வழக்கறிஞர் ஆவார். அவர் செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் வரலாற்றில் பி.ஏ (ஹானர்ஸ்) பட்டமும், டெல்லி பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி பட்டமும் பெற்றுள்ளார்.
மிஸ்ரா தனது அரசியல் பயணத்தை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் தொடங்கினார். 1996-ல் பூரி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற அவர், பின்னர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளத்தில் சேர்ந்து 2009, 2014 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் பூரி தொகுதியில் தொடர்ந்து வென்றார். பினாகி மிஸ்ரா ஜனவரி 1984-ல் சங்கீதா மிஸ்ராவை மணந்தார், ஆனால், பின்னர் அவர்கள் விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.