ரூ.5 பார்லே-ஜி பிஸ்கட் விலை ரூ.2,300: காசாவில் போரின் கொடூர முகம் காட்டும் அதிர்ச்சி வீடியோ

காசா: காசாவில் இருந்து சமீபத்தில் வெளியான ஒரு வைரல் பதிவில், இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இதுவும், போரின் கொடூர முகத்தைக் காட்டும் மற்றொருச் சான்று என இணையத்தில் கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது.

இந்தியாவில் மலிவு விலையில் கிடைக்கும் 5 ரூபாய் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட், போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் அசல் விலையை விட 500 மடங்கு அதிகமாக விற்கப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசாவில் இருந்து சமீபத்தில் வெளியான ஒரு வைரல் பதிவு, பார்லே-ஜி பாக்கெட் 24 யூரோக்களுக்கு மேல் (தோராயமாக ரூ.2,342) விற்கப்படுவதாகக் கூறி பெரும் பரபரப்பை உருவாக்கியது. அந்தப் பதிவில், “நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, இன்று ரவீஃப்புக்குப் பிடித்த பிஸ்கட் எனக்குக் கிடைத்தது. விலை 1.5 யூரோக்களிலிருந்து 24 யூரோக்களுக்கு மேல் உயர்ந்தாலும், ரவீஃப்புக்குப் பிடித்த விருந்தை என்னால் மறுக்க முடியவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.

ஐ.நா. தரவு அறிக்கையின்படி, காசாவில் இளம் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு விகிதம் கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே இரண்டு மாத போர் நிறுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, காசாவுக்குள் நுழையும் உதவிகளுக்கு இஸ்ரேல் 11 வார தடையை விதித்தது. இந்த தடை ஓரளவு நீக்கப்பட்டாலும், கட்டுப்பாடுகள் இன்னும் அமலில் உள்ளன. இதன்படி காசாவுக்குள் வரும் அனைத்து உதவிகளையும் சரிபார்க்க இஸ்ரேல் வலியுறுத்துகிறது. ஹமாஸ் பொருட்களைத் திருப்பிவிட்டதாக குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் ஹமாஸ் இதனை மறுத்து வருகிறது.

மே மாதத்தின் இரண்டாம் பாதியில் ஐ.நா தலைமையிலான ஊட்டச்சத்து குழு நடத்திய பகுப்பாய்வில், காசாவில் பரிசோதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 50,000 ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 5.8% பேர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகளைக் காட்டியதாகக் கண்டறிந்துள்ளது.

1938-இல் தொடங்கப்பட்ட பார்லே-ஜி இந்தியாவில் மலிவு விலையில் பிஸ்கட் பாக்கெட்டுகளை வழங்கி பிரபலமடைந்தது. அது தற்போது இந்திய வீடுகளில் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட பிராண்டுகளில் ஒன்றாக மாறியுள்ளது. 2011-ஆம் ஆண்டில், நீல்சனின் கூற்றுப்படி, பார்லே-ஜி உலகின் அதிக விற்பனையான பிஸ்கட்டாக மாறியது. 2013-ஆம் ஆண்டில், சில்லறை விற்பனையில் ரூ.5,000 கோடியைத் தாண்டிய முதல் இந்திய எப்எம்ஜிசி (FMCG) பிராண்ட் இதுவாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.