Virat Kohli retirement Update : இந்தியாவின் ஜாம்பவான் பேட்ஸ்மேன் விராட் கோலி சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். டெஸ்ட் போட்டியில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற்றதாக அவர் அறிவித்ததில் இருந்து ரசிகர்கள் இன்னும் அதிர்ச்சியில் உள்ளனர். ஏனென்றால், விராட் கோலி 10,000 டெஸ்ட் ரன்களுக்கு மிக அருகாமையில் இருக்கிறார். அப்படி இருக்கும் சமயத்தில் அவர் திடீரென்று டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். விராட் கோலி இந்தியாவுக்காக 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த போட்டிகளில் அவர் 46.85 சராசரியுடன் 9,230 ரன்கள் எடுத்தார். டெஸ்ட் போட்டியில் 30 சதங்கள் மற்றும் 31 அரைசதங்களை அடித்திருக்கிறார். டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் அதிகபட்ச ஸ்கோர் 254 நாட் அவுட் ஆகும். இந்த சூழலில் விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வாய்ப்புள்ளதாக மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
மைக்கேல் கிளார்க் கருத்து
இது குறித்து பேசிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பிளேயர் மைக்கேல் கிளார்க், விராட் கோலி தனது டெஸ்ட் ஓய்வை திரும்பப்பெற வாய்ப்புள்ளது என கூறியுள்ளார். இங்கிலாந்து மண்ணில் நடைபெறவிருக்கும் டெஸ்ட் தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் இழந்தால், விராட் கோலி மீண்டும் சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு திரும்புவார் என்று அவர் கூறியுள்ளார். இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் இழந்த பிறகு, இந்திய அணி நிர்வாகமும் தேர்வாளர்களும் விராட் கோலியை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புமாறு கோரலாம் என்றும் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி மிகப்பெரிய பிளேயர்
மைக்கேல் கிளார்க் பியாண்ட்23 கிரிக்கெட் பாட்காஸ்டில் பேசும்போது, ‘நான் இதை நம்புகிறேன். இங்கிலாந்தில் இந்திய அணி மோசமாக தோற்கடிக்கப்பட்டு, டெஸ்ட் தொடரை 5-0 என்ற கணக்கில் இழந்தால், ரசிகர்கள் விராட் கோலி ஓய்விலிருந்து திரும்பி வந்து மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று விரும்புவார்கள் என்று நினைக்கிறேன். நான் நேர்மையாகச் சொல்கிறேன். இங்கிலாந்தில் ஒரு பெரிய தோல்வியைப் பெற்றால், அவர் (விராட் கோலி) திரும்பி வருவார் என்று நினைக்கிறேன். அவர் இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டை விரும்புகிறார். ‘ டெஸ்ட் கேப்டனாக விராட் கோலி ஒரு சிறந்த சாதனையைப் படைத்துள்ளார். விராட் கோலி தனது தலைமையில் 68 டெஸ்ட் போட்டிகளில் 40 போட்டிகளில் இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார். விராட் கோலி இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக இருந்தவர்” என கூறியுள்ளார்
விராட் கோலி ஓய்வு வருத்தமளிக்கிறது
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் ஜூன் 20 ஆம் தேதி லீட்ஸில் தொடங்கும் இங்கிலாந்து தொடருக்கு முன்பு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். மைக்கேல் கிளார்க் கூறுகையில், ‘ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். ஆனால் அவரது கேப்டன்சி திறனை இந்திய அணி இழக்கும் என்று நான் நினைக்கிறேன். ரோகித் சர்மா ஒரு சிறந்த கேப்டன் என்று நான் நினைக்கிறேன். விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விலகிவிட்டார். இது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவர் விளையாடும் நேரத்தில் எவ்வளவு சிறந்த சாம்பியனாக இருந்தார், என்பதை நாம் அறிந்ததே. டெஸ்ட் கிரிக்கெட் அவரை இழக்கும்.’ என்றும் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.