“1.35 நிமிடத்தில் 52 பிராமி எழுத்துகள், உதடு ஒட்டாத திருக்குறள்..'' – அசத்திய கரூர் சிறுமிகள்

பிராமி எனப்படுவது பழமையான தமிழ் எழுத்து முறையாகும். இவற்றை தமிழி எழுத்துகள் என்றும் கூறுவார்கள். இந்த எழுத்துகள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. நாம் இன்றைய காலகட்டத்தில் எழுதும் தமிழ் எழுத்து முறைக்கு முன்னோடி எழுத்துமுறை தான் இந்த பிராமி எழுத்துகள்.

இப்போது இருக்கும் டெக் உலக காலத்தில் இது போன்ற பழமையான தமிழ் எழுத்து வடிவங்களை எழுதுபவர்கள் குறைவு. இருப்பினும் சிறுவயதிலிருந்தே இந்த பழமையான தமிழ் எழுத்துக்களை எழுதி அசத்தி வருகிறார்கள் கரூரை சேர்ந்த சிறுமிகள்.

பண்டைய தமிழ்ப் பிராமி எழுத்துகள்

இந்த பிராமி எழுத்துகளை குகை படுக்கைகள், நாணயங்கள், கல்வெட்டுக்கள், முதுமக்கள் தாழிகள் போன்ற பழமையான பொருள்களில் இப்போது பார்க்கிறோம்.

கரூரைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் பழமையான பிராமி எழுத்துமுறைகளை கற்பதில் ஆர்வம் காட்டி வருவது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

கரூர் மாவட்டம் மன்மங்கலம் வட்டம் வெண்ணைமலை எனும் ஊரைச் சேர்ந்தவர்கள் மணி மற்றும் மைதிலி தம்பதி இருவரும் தொல்லியல் ஆய்வாளர்கள்.

இவர்களின் மூத்த பெண் குழந்தை மிதிலா ஒரு நிமிடம் 35 வினாடிகளில் 52 தமிழி (பிராமி) எழுத்துகளை எழுதி அசத்தி உள்ளார். இரண்டாவது பெண் குழந்தை ஜெயமகதி அதே ஒரு நிமிடம் 35 வினாடிகளில் 20 உதடு ஒட்டாத திருக்குறள்களை ஒப்புவித்து அசத்தி உள்ளார்.

பெற்றோருடன் மிதிலா, ஜெயமகதி

இருவருக்கும் இந்த ஆர்வம் எப்படி ஏற்பட்டது என்று அவர்கள் பெற்றோர்களிடம் கேட்டபோது, “நாங்கள் இருவரும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் படிக்கும் போது எங்களின் குழந்தைகளையும் வகுப்பிற்கு கூட்டி செல்வோம். அப்போது, எங்கள் குழந்தைகள் தமிழி எழுத்துகளை பார்த்து ஏன் எல்லோரும் தலைகீழாக எழுதுகிறீர்கள் என்று கேட்பார்கள்.

ஆனாலும் கூட அந்த சிறு வயதிலேயே அந்த எழுத்துகளின் வடிவங்களை உன்னிப்பாக கவனிக்கும் திறமை அந்த குழந்தைகளிடம் இருந்துள்ளது. ஒருமுறை எங்களின் ஆசிரியர்கள் அவர்களிடம் ஒரு காகிதத்தை கொடுத்து, விளையாட்டாக இந்த எழுத்துகளை எழுதச் சொல்லவே அவர்களும் அதை எழுதி காட்டினர்.

எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்போதுதான் குழந்தைகள் பிராமி எழுத்துகளை உன்னிப்பாக கவனிப்பதும் அவை அவர்களின் மனதில் பதிந்ததும் எங்களுக்கு தெரியவந்தது. அதன் பிறகு தான் எங்கள் பிள்ளைகளுக்கு முறையாக பிராமி எழுத்துகளை கற்றுக் கொடுக்க திட்டமிட்டோம். அதேபோல் திருக்குறளையும் கற்றுக் கொடுத்தோம்.

1330 திருக்குறளையும் ஒப்புவித்தல் என்பது ‌ தற்போது அதிக அளவில் செய்யப்படும் உலக சாதனையாக உள்ளது. அதனால் திருக்குறளை அடிப்படையாக கொண்டு புதிதாக என்ன சாதனை செய்யலாம் என்று யோசித்தோம். முதலில் பறவைகளின் பெயர் இடம் பெற்றுள்ள குறள்களை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

ஆனால், அவ்வகையான குறள்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பதால் உதடு ஒட்டாத குறள்களை நோக்கி எங்களின் கவனம் திரும்பியது. 1330 குறள்களில் 22 திருக்குறள்களை உச்சரிக்கும் போது உதடு ஒட்டாது. அதில் 20 குறள்களை எங்களின் இரண்டாவது மகள் ஜெயமகதி ஒரு நிமிடம் 35 வினாடிகளில் ஒப்புவித்து சாதனை படைத்துள்ளார்.

முதலில் பிள்ளைகளை திருக்குறளை உச்சரிக்க வைப்பதற்கே சிரமமாக இருந்தது. அப்போது அதனை பாடலாக பாடி பயிற்சி எடுக்க வைத்தோம். பிறகு பேச வைத்தோம். பயிற்சியின் போது இரு பிள்ளைகளும் எழுதுவது மற்றும் பேசுவதற்கான நேரத்தை குறைப்பது தான் எங்களுக்கு சவாலாக இருந்தது. ஆனால் குழந்தைகளிடமிருந்த ஆர்வமும் ஒத்துழைப்பும் தான் வெற்றிக்கான பாதையை அடையச் செய்தது. தாய் மொழியாம் தமிழ் மொழியோடு பயணிக்கவே குழந்தைகள் ஆசை கொள்கின்றனர் ” என்று கூறி நெகிழ்ந்தனர்.

இந்த குழந்தைகளை பாராட்டி தனியார் விருது வழங்கும் நிறுவனம் ஒன்று பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.