கீழடி வரலாற்றை அழிக்க பாஜக முயற்சி: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: “எங்கள் வரலாற்றை வெளிக்கொணர பல நூறாண்டுகள் போராடினோம். அதனை எப்படியாவது மறைத்து அழிக்க ஒவ்வொரு நாளும் அவர்கள் (பாஜக) முயல்கிறார்கள்” என்று கீழடி விவகாரம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “கீழடி அகழாய்வில் இருந்து உலக அளவிலான ஆய்வகங்களுக்கு அனுப்பி, கரிமப் பகுப்பாய்வில் காலக்கணக்கீடு செய்யப்பட்ட மாதிரிகள், ஏஎம்எஸ் (AMS) அறிக்கைகளை அளித்த பின்னரும் மேலும் சான்றுகள் தேவை என்கிறார்கள் அவர்கள். இதற்கு நேர்மாறாக, மதிப்புமிக்க வரலாற்றாய்வாளர்கள், தொல்லியல் அறிஞர்கள் கடுமையாக எதிர்க்கும் நிலையிலும் கற்பனையான சரஸ்வதி நதி நாகரிகத்தை பாஜக ஆதரிக்கிறது. எந்த நம்பத்தகுந்த சான்றும் இல்லாமல் இதனை அவர்கள் முன்னெடுக்கிறார்கள்.

ஆனால், நாம் கடுமையான பரிசோதனைகள் மூலம் நிறுவியுள்ள தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையைப் புறந்தள்ளுகிறார்கள். கீழடி மற்றும் தமிழ் மரபுசார் உண்மையைப் பொறுத்தவரை பாஜக – ஆர்எஸ்எஸ் கும்பல் கதறுவது சான்றுகள் இல்லை என்பதால் அல்ல, கீழடி காட்டும் உண்மை அவர்கள் முன்னெடுக்கும் ‘ஸ்க்ரிப்ட்’-க்கு எதிரானதாக இருப்பதால்தான். எங்கள் வரலாற்றை வெளிக்கொணர பல நூறாண்டுகள் போராடினோம். அதனை எப்படியாவது மறைத்து அழிக்க ஒவ்வொரு நாளும் அவர்கள் முயல்கிறார்கள். எல்லாவற்றையும் உலகம் உற்று நோக்கிக் கொண்டுதான் இருக்கிறது. காலமும் கூட” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு: இதனிடையே, அறிவியல்பூர்வமாக கீழடி அகழாய்வுகள் நிரூபிக்கப்பட்ட பிறகும் அதை ஏற்று ஆய்வை வெளியிட மறுக்கும் பாஜகவை கண்டித்து மதுரையில் வருகிற 18-ம் தேதி திமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருப்பதாக மாணவர் அணிச் செயலாளர் இரா.ராஜீவ்காந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, கீழடி என்கிற பெயரே பாஜக அரசுக்கு வேப்பங்காயாகக் கசக்கிறது. கீழடி ஆய்வை மேற்கொள்ளவே நீதிமன்றத்தை நாடவேண்டியிருந்தது. அகழாய்வை மேற்கொண்ட அதிகாரிகள் பாஜகவின் குரலாக ஒலிக்கவில்லை என்பதற்காக அவர்கள் தூக்கி எறியப்பட்டார்கள்.

கடந்த கால அடிமை எடப்பாடி அரசும் பாஜக-வினரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு கீழடி அகழாய்வைக் கிடப்பில் போட்டது. தமிழ்நாட்டில் கழகத் தலைவர் தலைமையிலான அரசு அமைந்ததும் கீழடி அகழாய்வுக்குப் புத்துயிர் கொடுத்ததோடு துரிதமாக பலகட்ட ஆய்வுகள் நடத்தி அருங்காட்சியகத்தையும் கட்டியெழுப்பினார். அறிவியல்பூர்வமாக கீழடி அகழாய்வுகள் நிரூபிக்கப்பட்ட பிறகும் அதை ஏற்று ஆய்வை வெளியிட மறுக்கும் தமிழர் விரோத பாஜக அரசைக் கண்டித்து வருகிற ஜூன் 18ஆம் தேதி காலை 10 மணிக்கு திமுக மாணவர் அணி சார்பில், “மதுரை, வீரகனூர் சுற்றுச்சாலை”யில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழக மாணவர் அணியின் மாநில நிர்வாகிகள் – மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவர் அமைப்பின் நிர்வாகிகள் அவர்களது தோழர்களுடன் பெருந்திரளாக பங்கேற்று, போராட்டத்தை வெற்றியடையச் செய்ய அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.