இஸ்ரேலின் ‘அயன் டோம்’ வான் பாதுகாப்பு கவசம் செயல்படுவது எப்படி? 

இஸ்ரேல் நாட்டின் ‘அயன் டோம்’ வான் பாதுகாப்பு கவசத்தின் சிறப்புகள், வசதிகள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அந்த பாதுகாப்பு கவசத்தையும் மீறி இஸ்ரேலை ஈரான் ஏவுகணைகள் தாக்கியதும் கவனிக்கத்தக்கது.

ஈரான் நாட்டின் அணுசக்தி திட்டங்கள் மற்றும் ராணுவத் தளபதிகளை குறிவைத்து இஸ்ரேல் நேற்று முன்தினம் காலை ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில் 78 பேர் உயிரிழந்ததாகவும், 320 பேர் படுகாயமடைந்ததாகவும் ஈரான் ஐநா பிரதிநிதி தெரிவித்தார்.

ஈரானின் நடான்ஸ் அணுசக்தி செறிவூட்டும் வசதி, ஃபோர்டோ மற்றும் இஸ்ஃபஹான் அணு ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய தளங்கள் தாக்கப்பட்டது. நடான்ஸ் பகுதியில் உள்ள வளாகம், 60 சதவீதம் யுரேனியத்தை வளப்படுத்தும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில், இதற்கு பதிலடியாக நேற்று காலை வரை, ஈரான் நாடு ‘ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்’ என்ற பெயரில் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் நகரங்கள் மீது ஏவுகணைகளை ஏவி கடும் தாக்குதலை நடத்தியது. இதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 34 பேர் காயமடைந்தனர். ரிஷோன் லெசியோனில் நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பேர் உயிரிழந்து, 19 பேர் காயமடைந்தனர். இரு நாடுகளும் மாறி மாறி வான்வழித் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றன.

ஈரான் பதில் தாக்குதல் நடத்தியபோது, தங்கள் நாட்டில் அமைக்கப்பட்டுள்ள வான் பாதுகாப்பு கவசமானது, எதிரி நாட்டின் ஏவுகணைகளை வெற்றிகரமாக இடைமறித்து அழித்தது என்று இஸ்ரேல் கூறியது. இந்த வான் பாதுகாப்பு கவசத்துக்கு ‘அயன் டோம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் ‘அயன் டோம்’ வான் பாதுகாப்பு கவசத்தில் ரேடார், கட்டுப்பாட்டு அறை, ஏவுகணைகள் பொருத்தப்பட்ட கவச வாகனம் ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும். எதிரிகளின் ஏவுகணைகளை கவச வாகனத்தில் உள்ள ரேடார் கண்காணித்து, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கும். கட்டுப்பாட்டு அறையில் இருந்து பிறப்பிக்கப்படும் உத்தரவின்படி கவச வாகனத்தில் இருந்து ஏவுகணைகள் சீறிப் பாய்ந்து எதிரிகளின் ஏவுகணைகளை நடு வானிலேயே இடைமறித்து அழிக்கும்.

கவச வாகனத்தில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் சுமார் 200 கிலோமீட்டர் தொலைவு வரையிலான இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும். இதுதான் ‘அயன் டோம்’ வான் பாதுகாப்பு கவசத்தின் முக்கிய அம்சமாகும். அமெரிக்காவின் நிதியுதவியுடன் இது உருவாக்கப்பட்டது. ஆனாலும், ‘அயன் டோம்’ வான் பாதுகாப்பு கவசத்தையும் மீறி, ஈரானின் பல்வேறு ஏவுகணைகள், டெல் அவிவ் நகரின் பல்வேறு பகுதிகளைத் தாக்கின.

இதுகுறித்து இஸ்ரேல் நாட்டு தலைவர்கள் கூறும்போது, “இஸ்ரேல் நாட்டின் வான் பாதுகாப்பு கவசமானது, நீண்ட ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. ஆனால் இதற்கு 100 சதவீத உத்தரவாதம் தரமுடியாது. ஆனாலும், ஈரான் நடத்திய தாக்குதல்களில் இருந்து, பெரும்சேதத்தைத் தவிர்த்தது. மேலும் உயிரிழப்பையும் குறைத்தது.

இந்த வான் பாதுகாப்பு கவசமான ‘அயன் டோம்’ 2010-ல் உருவாக்கப்பட்டது. அமெரிக்க நிதியுதவியுடன் இதைத் தயாரித்தோம். அப்போது பாலஸ்தீனத் தாக்குதலில் இருந்து தப்பிக்க இதைப் பயன்படுத்தினோம். பாலஸ்தீனம் ஏவிய ஆயிரக்கணக்கான ராக்கெட்களை இது இடைமறித்து அழித்தது.

அதேபோல், அமெரிக்காவின் உதவியுடன் அமைக்கப்பட்ட ‘ஏரோ’ சிஸ்டம், நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கக்கூடியது. ஈரான் தாக்குதலில் இந்த ஏரோ சிஸ்டமும் பெரும்பாலான ஏவுகணைகளை அழித்தது. அதேபோல் ‘டேவிட்’ஸ் ஸ்லிங்’ எனப்படும் வான் பாதுகாப்பு கவசமானது, நடுத்தர தூர ஏவுகணைகளை அழிக்கும் திறன் கொண்டது. இதையும், அமெரிக்க நிதியுதவியுடன் உருவாக்கினோம். நேற்று ஈரான் நடத்திய தாக்குதலில் ‘டேவிட்ஸ் ஸ்லிங்’கும் மிகத் திறமையாக செயல்பட்டு ஏவுகணைகளை இடைமறித்து அழித்தது” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.