பாத்திரம் கழுவும் தொழிலாளியின் மகன் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பாத்திரம் கழுவும் தொழிலாளியின் மகன் நீட் தேர்வில் ஓபிசி பிரிவில் 4071 இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். அவருக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தானின் பலோத்ரா நகர் அருகில் உள்ள கட்டோ கிராமத்தைச் சேர்ந்தவர் ஷ்ரவன் குமார் (19). இவரது பெற்றோர் திருமணம் மற்றும் இதர விழாக்களில் பாத்திரம் கழுவும் தொழிலாளிகளாக பணியாற்றுகின்றனர். அதோடு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் கிடைக்கும் பணிகளிலும் அவ்வப்போது ஈடுபட்டு அதில் கிடைக்கும் ஊதியத்தை வைத்து வாழ்க்கை நடத்துகின்றனர். ஷ்ரவன் குமாரும் படித்துக் கொண்டே அருகில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

குடும்பத்தில் நிதி நெருக்கடிகள் இருந்தாலும் ஷ்ரவன் குமார் அரசு பள்ளியிலேயே படித்து 10-ம் வகுப்பில் 97 சதவீத மதிப்பெண்ணும், 12-ம் வகுப்பில் 88 சதவீத மதிப்பெண்ணும் பெற்றார். ராஜஸ்தானின் பார்மர் பகுதியில் உள்ள அரசு மருத்துவர்கள், ஏழை மாணவர்களுக்கு இலவச நீட் தேர்வு பயிற்சி அளித்துள்ளனர். அங்கு சேர்ந்த ஷ்ரவன் குமார் பயிற்சி பெற்றுள்ளார். நேற்று முன்தினம் தொழிற்சாலையில் ஷ்ரவன் குமார் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, நீட் தேர்வு முடிவில் ஒபிசி பிரிவு தரவரிசையில் 4071-வது இடம் பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 55,688 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ள நிலையில், ராஜஸ்தானில் உள்ள 3 அல்லது 4 அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஷ்ரவன் குமாருக்கு இடம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. இத்தகவல் அவர்கள் வசிக்கும் கிராமத்தினருக்கு மகிழ்ச்சியை அளித்தது. கிராம மக்கள் ஷ்ரவன் குமார் வசிக்கும் குடிசை வீட்டுக்கு வந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வாழ்த்து தெரிவித்தனர்.

நீட் தேர்வில் வெற்றி பெற்றது குறித்து ஷ்ரவன் குமார் கூறுகையில், ‘‘ மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை பிளஸ் 2 முடித்த பின் படிப்பது பற்றி நான் கற்பனை கூட செய்யவில்லை. எங்கள் கிராமத்துக்கு 2022-ம் ஆண்டுதான் மின்வசதி கிடைத்தது. என் தாய்க்கு மாநில அரசின் திட்டத்தில் 3 ஆண்டுக்கு இலவச இன்டர்நெட் வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைத்தது. மின் இணைப்பு கிடைத்ததால், அதிக நேரம் படிக்க முடிந்தது. இன்டர்நெட் இணைப்பால் வெளியுலகம் பற்றி அறிய முடிந்தது. நீட் தேர்வு எழுத இலவச பயிற்சியும் கிடைத்ததால, 4071-வது இடத்தை பிடிக்க முடிந்தது’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.