''விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய்கள் பதிக்கக்கூடாது'': டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சென்னை: கோவை, திருப்பூரில் விளைநிலங்களின் வழியாக எண்ணெய் குழாய் பதிக்கும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே, விளைநிலங்கள் பாதிக்காத வகையில் மாற்று ஏற்பாடுகளை செய்ய மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சார்பாக கோவை இருகூர் முதல் கர்நாடக மாநிலத்தின் தேவனஹந்தி வரை நடைபெறும் IDPL (Irugur-Devangonthi Pipeline) எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே, கொச்சி –கோவை – கரூர் வழித்தடத்தில் பதிக்கப்பட்ட பைப் லைன் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு இதுவரை வழங்கப்படாத நிலையில், மேலும் ஒரு ராட்சத குழாயை விளைநிலங்களில் பதிக்க பணிகள் நடைபெற்று வருவது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோலிய நிறுவனத்தின் ராட்சத குழாய்களை விளைநிலங்கள் வழியாக அமைக்கப்படாமல் சாலைகளின் ஓரமாக அமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை மத்திய மாநில அரசுகள் நிராகரித்திருப்பதோடு, விவசாயிகளின் அனுமதியின்றி கோவை மாவட்டம் இருகூரில் இருந்து திருப்பூர் மாவட்டம் முத்தூர் வரை சுமார் 70 கி.மீட்டர் தூரத்திற்கு குழாய் பதிக்கும் பணியை தொடங்கியிருப்பது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து, அத்திட்டத்தை விளைநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுத்துவதோடு , ஏற்கனவே விளைநிலங்களில் பதிக்கப்பட்டுள்ள எண்ணெய் குழாய்களுக்கான உரிய இழப்பீட்டை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.