உலகின் 50% டிஜிட்டல் பரிவர்த்தனை இந்தியாவில் நடைபெறுகிறது: சைப்ரஸ் கூட்டத்தில் பிரதமர் மோடி பெருமிதம்

லிமாசோல்: உலகின் 50% டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இந்தியாவில் யுபிஐ மூலம் நடைபெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி சைப்ரஸில் நடைபெற்ற கூட்டத்தில் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இந்தியா-சைப்ரஸ் சிஇஓ அமைப்பின் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி இதுகுறித்து மேலும் கூறியதாவது: இந்தியாவில் ஜிஎஸ்டி, கார்ப்பரேட் வரி மற்றும் பல ஆயிரம் சட்டங்களை குற்றமற்றதாக்குதல் மூலம் வரி சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் அரசு தெளிவான மற்றும் நிலையான கொள்கைகளை உறுதிப்படுத்தியுள்ளது. அதைத்தவிர, வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கு தேவையான முதன்மையான முக்கியத்துவத்தையும் அரசு அளித்துள்ளது.

இந்தியா இன்று உலகளவில் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. மூன்றாவது பெரிய பொருளாதாரத்தை நோக்கிய இந்தியா தற்போது வேகமாக முன்னேறி வருகிறது. இது விரைவில் நிறைவேறும். உலகின் 50% டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இந்தியாவில் யுபிஐ மூலமாக நடைபெறுகிறது.

இது இந்தியாவில் ஏற்பட்டுள்ள டிஜிட்டல் புரட்சியை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் நிதி ஒருங்கிணைப்பு சேவைகளை மேம்படுத்துவதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் மிகப்பெரிய வாய்ப்பினை வழங்கியுள்ளது. இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் சைப்ரஸ் வருவது இதுவே முதல் முறை. அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி.

பல இந்திய நிறுவனங்கள் சைப்ரஸை ஐரோப்பாவுக்கான நுழைவு வாயிலாக கருதுகின்றன. இன்று இருநாடுகளின் பரஸ்பர வர்த்தகம் 150 மில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. ஆனால், நமது உறவுகளின் உண்மையான ஆற்றல் அதைவிட அதிகம். உங்களில் பெரும்பாலானோர் இந்தியாவுடன் தொடர்புடையவர்கள்.

இந்தியாவில் எதிர்கால உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் 100 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு செய்து வருகிறோம். இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் உற்பத்தி திட்டங்களுக்கான இலக்குகளை நிர்ணயித்துள்ளோம். கடல்சார் மற்றும் துறைமுக மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்துவதே எங்களது முக்கிய நோக்கம்.

கப்பல் கட்டுதல் மற்றும் கப்பல் உடைப்புக்கு ஒரு புதிய கொள்கையை கொண்டுவர உள்ளோம். சிவில் விமானப் போக்குவரத்து துறை வேகமாக முன்னேறி வருகிறது. எங்கும் புதுமை எதிலும் புதுமை என்ற கொள்கை இந்தியாவின் பொருளாதார வலிமையின் வலுவான தூணாக மாறியுள்ளது.

1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கனவுகளை மட்டுமல்ல தீர்வுகளையும் நிஜமாக்கி வருகின்றன. இந்த நிலையில், பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதில் சைப்ரஸின் உறுதிப்பாட்டை இந்தியா நன்றாகவே உணர்ந்துள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

பிரதமருக்கு சைப்​ரஸ் உயரிய விருது: சைப்ரஸ் தலைநகர் நிகோசியாவில் உள்ள அதிபர் மாளிகையில் பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசின் சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. சைப்ரஸ் நாட்டின் மிக உயரிய விருதான கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப் மாகாரியோஸ் III விருதை பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடவ்லிட்ஸ் வழங்கி கவுரவித்தார். “இது நரேந்திர மோடிக்கு மட்டுமல்ல 140 கோடி இந்தியர்களுக்கு தந்த மரியாதை” என்று சைப்ரஸ் மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.