பெரு நகரங்களில் வீடு வாங்குவது ஏழைகளுக்கு சாத்தியமற்றதாகிவிட்டது – ராகுல் காந்தி

புதுடெல்லி: பெரு நகரங்களில் வீடு வாங்க வேண்டும் என்றால் நடுத்தர வர்க்கத்தினருக்கு 100 ஆண்டுகால சேமிப்பு தேவையாக உள்ளது, அதுவே ஏழைகள் என்றால் வாய்ப்பே இல்லை என்ற நிலையே உள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மும்பை மாநகரில் ஒரு வீடு வாங்க வேண்டும் என்றால், நடுத்தர வர்க்கத்தினருக்கு தங்கள் வருவாயில் ஆண்டுக்கு 30 சதவீத சேமிப்பு என 109 ஆண்டு கால சேமிப்பு தேவைப்படுகிறது என ஒரு புள்ளி விவரம் தெரிவிப்பதாக வெளியாகி உள்ள செய்தியை சுட்டிக்காட்டி காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தனது வாட்ஸ்அப் சேனலில் கூறி இருப்பதாவது:

“வீடுகளின் விலை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. குறிப்பாக பெரிய நகரங்களில் வீடு வாங்குவது என்பது நடுத்தர வர்க்கத்தினருக்கும்கூட எளிதல்ல. அவர்கள், தங்களின் ஆண்டு வருமானத்தில் 30 சதவீதத்தை 109 ஆண்டுகளுக்கு சேமித்தால் மட்டுமே மும்பையில் வீடு வாங்க முடியும்.

பெரிய நகரங்களில் வாய்ப்புகளையும், வெற்றிகளையும் தேடிக் கஷ்டப்பட்டு உழைக்கிற பெரும்பாலான மக்களின் நிலைமை இதுதான். நடுத்தர வர்க்கத்தினருக்கு இவ்வளவு சேமிப்பு எங்கிருந்து வரும்?

ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் மரபுரிமை என்பது செல்வம் அல்ல. மாறாக, குழந்தைகளுக்கான விலையுயர்ந்த கல்வி, விலையுயர்ந்த சிகிச்சை, பெற்றோர்களைப் பார்த்துக்கொள்வது, குடும்பத்திற்கு ஒரு சிறிய கார் வாங்குவது என ஏராளமான பொறுப்புகள் அவர்களுக்கு உள்ளது.

நிறைய இதயங்களில், ஒரு நாள் நமக்குச் சொந்தமாக ஒரு வீடு இருக்கும் என்ற ஒரு கனவு இருக்கிறது. ஆனால் அந்த ‘ஒரு நாள்’ நடுத்தர வர்க்கத்தினருக்குக்கூட 109 வருடங்களுக்குப் பிறகே வரும் எனும்போது, ஏழைகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். ​​ஏழைகள் கனவு காணும் உரிமையை இழந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் நான்கு சுவர்களும் தலைக்கு மேல் ஒரு கூரையும் கொண்ட வசதியான ஒரு வீடு தேவை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அது உங்கள் வாழ்நாளின் கடின உழைப்பு மற்றும் சேமிப்பை விட அதிக செலவு கொண்டதாக உள்ளது.

அடுத்த முறை யாராவது மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிவரங்களை உங்களிடம் கூறும்போது, ​​உங்கள் உள்நாட்டு பட்ஜெட் பற்றிய உண்மையை அவர்களுக்குக் காட்டுங்கள் – மேலும், இந்தப் பொருளாதாரம் யாருக்காக என்று கேளுங்கள்?” . இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.