நார்த்தம்டான்,
இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி (19 வயதுக்குட்பட்டோர்) இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நார்த்தம்டானில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 49 ஓவர்களில் 290 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது.
இந்தியா தரப்பில் விஹான் மல்ஹோத்ரா 49 ரன்களும், ராகுல் குமார் 47 ரன்களும், வைபவ் சூர்யவன்ஷி மற்றும் கன்ஷிக் சவுஹான் தலா 45 ரன்களும் அடித்தனர். கேப்டன் ஆயுஷ் மாத்ரே கோல்டன் டக் ஆகி ஏமாற்றினார். இங்கிலாந்து தரப்பில் பிரெஞ்சு 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 291 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும் கேப்டன் தாமஸ் ரியூ 131 ரன்கள் குவித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். அவர் 131 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்வரிசை வீரர்களும் விரைவில் ஆட்டமிழக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
இங்கிலாந்து வெற்றி பெற கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவை என்ற நிலையில் கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது. உச்சக்கட்ட பரபரப்புக்கு மத்தியில் இறுதி ஓவரை இந்தியாவின் யுதாஜித் குஹா வீசினார். அந்த ஓவரின் முதல் 3 பந்துகளிலேயே 7 ரன்கள் அடித்த இங்கிலாந்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது.