கொல்கத்தா: மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக வழக்கறிஞர் மனோஜித் மிஸ்ரா, அவரது நண்பர்கள் ஜைப் அகமது, மிரமித் முகர்ஜி, கல்லூரியின் பாதுகாவலர் பினாகி பானர்ஜி ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த வழக்கு குறித்து கொல்கத்தா போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: கைதான 4 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதல்கட்ட விசாரணையில், பிரதான எதிரி மனோஜித் மிஸ்ரா, சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது. மானபங்கம், திருட்டு, அடிதடி என அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மனோஜித்தின் தந்தை ராபின் மிஸ்ரா மேற்குவங்கத்தின் காளிகாட்டில் உள்ள கோயிலில் அர்ச்சகராக பணியாற்றுகிறார்.அவரது தாய் நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். தந்தையுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரது பேச்சை கேட்காமல் கடந்த 4 ஆண்டுகளாக மனோஜித் குடும்பத்தை பிரிந்து தனியாக வாழ்கிறார்.
தற்போது அவர் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். பாலியல் வன்கொடுமை நடைபெற்ற நாளில் மனோஜித் யாருடன் பேசினார், அவருக்கு நெருக்கமானவர்கள் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம். இதற்காக அவரது செல்போனை ஆய்வகத்துக்கு அனுப்பி உள்ளோம். ஆய்வக அறிக்கை கிடைத்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்போம். இவ்வாறு கொல்கத்தா போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.