புதுடெல்லி: பரமக்குடி-ராமநாதபுரம் இடையே ரூ.1,853 கோடியில் 46.7 கி.மீ. தொலைவுக்கு 4 வழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை (இஎல்ஐ) திட்டம், ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புதுமைத் திட்டம்(ஆர்டிஐ), தேசிய விளையாட்டுக் கொள்கை, தமிழகத்தில் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
4 முக்கிய முடிவுகள்.. ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகையில் இந்த திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன. பிரதமர் மோடியின் தலைமையில் எடுக்கப்பட்ட இந்த 4 முக்கிய முடிவுகள், இளைஞர்களை மேம்படுத்துதல், புதுமைகளை ஆதரித்தல், விளையாட்டுகளை மேம்படுத்துதல், உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்க மாகக் கொண்டுள்ளன. தமிழகத்தில் பரமக்குடி, ராமநாதபுரம் இடையே ரூ,1,853 கோடியில் 4 வழிச்சாலைத் திட்டம் அமைய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது, மதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம், ராமேசுவரம், தனுஷ்கோடி இடையிலான இரு வழி தேசிய நெடுஞ்சாலை எண்.87, அதனுடன் தொடர்புடைய மாநில நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் இந்த 4 வழிச் சாலை அமைக்கப்பட உள்ளது.
இந்த மேம்படுத்தப்பட்ட வழித்தடம், மதுரை, ராமேசுவரம் ஆகிய 2 முக்கிய ரயில் நிலையங்கள், மதுரை விமான நிலையம், பாம்பன், ராமேசுவரம் துறைமுகங்கள் ஆகியவற்றுடன் இணைப்பை ஏற்படுத்துவதன் மூலம் பல்முனை போக்குவரத்து ஒருங்கிணைப்பை உறுதி செய்யும். இந்த திட்டம் நிறைவடைந்தவுடன், இப்பகுதியில் பொருளாதார வளர்ச்சி மேம்படுவதுடன், வழிபாட்டு மற்றும் பொருளாதார மையங்களுக்கு இடையிலான இணைப்பையும் வலுப்படுத்த உதவும். ராமேசுவரம்,தனுஷ்கோடியில் சுற்றுலாவை மேம்படுத்தவும் இது உதவும்.
வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: மேலும், ரூ.1.07 லட்சம் கோடியில் வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டமும் அமல்படுத்தப்பட உள்ளது. வேலைவாய்ப்பு, உற்பத்தி துறைகளை மேம்படுத்தும் நோக்கில் இது கொண்டு வரப்படவுள்ளது. இதன்மூலம் முதல்முறையாக வேலையை உருவாக்கும் முதலாளிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். கடந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தை தற்போது அமலுக்கு கொண்டு வருகிறோம்.
ஆராய்ச்சி மேம்பாடு: ஆர்டிஐ எனப்படும் ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புதுமைத் திட்டம் ரூ.1 லட்சம் கோடியில் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் உலகளாவிய சிறந்த நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டதாகும். மேலும், ஆராய்ச்சியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திட்டங்களை உறுதியான தயாரிப்புகளாக மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது.
நாட்டில் விளையாட்டுத் துறையை அடுத்த 10 ஆண்டுகளில் வளர்ச்சி மிகுந்த துறையாக மாற்ற அரசு உறுதி பூண்டுள்ளது. அதற்காக தேசிய விளையாட்டுக் கொள்கை-2025 அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விரிவான கொள்கை, அடிமட்டத்திலிருந்து உயர்மட்டம் வரை வீரர், வீராங்கனைகளின் விளையாட்டுத் திறமையை வளர்ப்பது, பயிற்சியை மேம்படுத்துவது, நாட்டின் விளையாட்டு உட்கட்டமைப்பை வலுப் படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வாறு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
3.5 கோடி வேலைவாய்ப்பு: வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை (இஎல்ஐ) திட்டத்தின் கீழ் 2 ஆண்டுகளில் 3.5 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் உற்பத்தித்துறையில் சேரும் இளைஞர்களுக்கு மாதம்தோறும் ரூ.15 ஆயிரம் ஊதியமாக கிடைக்கும். அதேநேரத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கும் முதலாளிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகையை மத்திய அரசு வழங்கும் என்று தெரிய வந்துள்ளது.